Breaking
Mon. Dec 23rd, 2024
-எம்.ஏ.ஹபீழ் ஸலபி –
அண்மைக்காலமாக வில்பத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் விவாதப்  பொருளாகியுள்ள இந்த விவகாரம் ஜனாதிபதியின் வில்பத்து விரிவாக்கல் அறிவிப்புடன் இனவாத அரசியல் சதுரங்கத்தில் விசனங்களையும் விமர்சினங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
1990 ஒக்டோபர் திங்கள் இறுதிப் பகுதியில் புலிகளால் இனச்சுத்திகரிப்புக்குட்படுத்தப்பட்ட வடக்கின் முசலிப் பிரதேச  முஸ்லிம்கள் வில்பத்து சரணாலயத்துக்கு உரித்தான காடுகளைச் சட்டவிரோதமான முறையில் அழித்து, குடியேற்றங்களை மேற்கொண்டுவருவதாக தென்னிலங்கை பேரினவாத இயக்கங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இது தொடர்பாக எதிரும் புதிருமான விமர்சனங்கள் ஊடகங்களில் வந்தவண்ணமுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக நேர்மையான  புரிதல் ஒன்றை வேண்டி நிற்கும் தருணத்தில் நாம் உள்ளோம். எனவே, வில்பத்து விவகாரம் தொரடர்பாக இந்த கட்டுரை ஆராய்கிறது.
வரலாறும் அமைவிடமும்
இலங்கை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் 1905ம் ஆண்டுதான் இது சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, 1938ஆம் ஆண்டு பெப்ரவரி 25ம் திகதி தேசிய பூங்காவாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த சரணாலயம் அமைந்துள்ள இடம் வரவாற்றுப் புகழ் மிக்க சில தரவுகளையும் கொண்டுள்ளது. கி.மு 543ல் விஜயன் தன் தோழர்களுடன் வந்திறங்கிய இடம் “குதிரை மலை” ஆகும். “கலி வில்லு” என்ற ஊர்  வில்பத்து சரணாலயத்திற்குட்பட்ட பகுதியிலேயே அமைந்துள்ளது. விஜயன் திருமணம் செய்த குவேனி இங்கேதான் வாழ்ந்துள்ளாள். சுமார் 2000 வருடங்களுக்கு முன் “மரதண் மடுவ” என்ற ஊரிலேயே துட்டகைமுனு வாழ்ந்ததாக வரலாற்றுக் குறிப்புக்கள் உள்ளன. இந்த இடமும் இந்த வனப் பகுதியிலேயே உள்ளது.
வில்பத்து என்பது மன்னார் – வவுனியா – புத்தளம் – அனுரதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளை எல்லைகளாகக் கொண்ட இலங்கையின் பிரபல விலங்குகள் சரணாலயம் ஆகும். ஐந்து சிறு காடுகளை உள்ளடக்கிய இந்நிலப்பரப்பு. புத்தளத்துக்கு வடக்காகவும் அநுராதபுரத்துக்கு வட மேற்காகவும் வடக்கு பெருநிலப்பரப்பை ஊடறுத்து வியாபித்திருக்கிறது. இது, அனுராதபுரத்தில் இருந்து 30 கி.மீ தூரத்திலும் கொழும்பில் இருந்து 180 கி.மீ துாரத்திலும் கடல் மட்டத்திலிருந்து 152 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. இதன் தெற்கு எல்லையாக மோதரகம் ஆறும் வடக்கு எல்லையாக கலா ஓயாவையும், மேற்கு எல்லையாக இந்து சமுத்திரத்தையும் கொண்டுள்ளது.  வில் பத்துவே இலங்கையில் உள்ள பெரிய சரணாலயம் ஆகும். இதன் பரப்பளவு 131, 693ஹெக்டேயர் ஆகும்.வனப்பகுதிக்குள்ளாக அறுபதுக்கும் மேற்பட்ட குளங்களும், ஏரிகளும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
 இங்கு ஆண்டுக்கான சராசரி வெப்பநிலை 27.2 செல்சியசாக காணப் படுகிறது. மழை வீழ்ச்சி ஆண்டுக்கு 1000மிமி ஆகும். இலங்கையின் வரண்ட வலயத்தில் அமைந்திருந்தாலும் அதிகமான நீர் நிலைகள், அடர் மரங்கள் வட கீழ் பருவக் காற்று மூலமும், மார்ச் ஏப்பிரல் மாதங்களில் பருவ மழை மூலமும் நீரைப் பெற்றுக் கொள்ளும் வில்பத்துவில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உலர் கால நிலையாகவே காணப்படுகிறது.
தொன்மையான வரலாற்றைக் கொண்ட வில்பத்துக் காட்டின் உள்பகுதியில் அதிகம் மழை பெறும் இடங்களில் உயர்ந்த மரங்கள் வளர்ந்து, அடர்ந்த காடுகளும், கடல் சார்ந்த பகுதிகளில் உவர் நீர்த் தாவரங்களும், மற்றும் பற்றைக் காடுகளும், புதர்க் காடுகளும் உள்ளன.
இந்த பூங்காவில் சிறுத்தைகள், யானைகள், நரிகள், ஓநாய்கள், மான்கள் போன்ற விலங்குகளும் 120 வகையான பறவைகளும் வாழ்கின்றன. இங்கு 31 வகையான பாலூட்டிகள் வாழ்கின்றன. அவற்றில் உலகில் அருகி வரும் பாலூட்டி விலங்குகளான The elephant, Sloth bear, leopard, water Buffalo போன்றவையும் உள்ளன.
தாவரங்களைப் பொறுத்தவரை Palu,  Satin, Milla Weera, Ebony, Wewarna போன்றவை இங்குள்ள முக்கிய வகைகளாகும்.
இங்கு ஈர நிலப் பறவைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. Garganey, Pin tail, Whistling teal, Spoonbill, White ibis, Large white egret, Cattle egret, Purple heron போன்ற அரிய வகைகளும் இதில் அடங்கும். அத்தோடு,Monitor Mugger crocodile, Common cobra, Rat snake, Indian python, and Pond turtle போன்ற ஊர்வன அதிகமாக வாழ்கின்றன.
புலிகளுடனான போர் காரணமாக 1988 டிசம்பரில் மூடப்பட்ட வில்பத்து சரணாலயம் இப்போது பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
பலவந்த வெளியெற்றமும் மீள் குடியேற்றமும்
1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இறுதித் தினங்களில் வடமாகாணத்தைச் சேர்ந்த 15 ஆயிரம்  முஸ்லிம் குடும்பங்களின் பிரதிநிதிகளான ஓர் இலட்சம் பேர், புலிகளினால் 24 மணி நேர அவகாசத்தில்  பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இனச் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டனர். இதனால், அந்த மக்கள் கல்வி, கலாசார பொருளாதாரத் துறைகளில் மிகப் பெரும் பின்னடைவை கடந்த 25 வருடங்களாக அனுபவித்துவந்தனர். அவர்களது வீடுகள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்திருந்தன. மனித நடமாட்டம் அற்றுப் போனதால் காடுகள் வளர்ந்து, புற்கள் வளர்ந்து புற்றுகள் தோன்றி விசஜந்துக்கள் கூட அங்கு குடியேறியிருந்தன.
இவ்வாறான சூழலில், 1990களில் இடம்பெயரந்த மக்கள்,போர் முடிவின் பின்னர் அண்மைக்காலமாக தாம் பறிகொடுத்த சொந்த இடங்களில் மீளக் குடியேறிவருகின்றனர். இதுவரை முழுமையாக மீள்குடியேற்றம் பூர்த்தியடையாத நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பணிப்புரை தீவிர இனவாத இயக்கங்களுக்கு வேண்டுமென்றால் சந்தோசமாக இருக்கலாம்.    ஆனால், இது வடபுல முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், அதிர்ச்சியும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. புலிகளால் இனச்சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்ட மக்களின் சொந்தக் காணிகள் மீள் அளிக்கப்பட்டு, இன்னும் முழுமையாக குடியேற்றப்படாத நிலையில், முஸ்லிம்களின் குடியிருப்புப் பிரதேசத்தில் ஒரு பகுதியை அரசாங்கம் வனபரிபாலன திணைக்களத்துக்கு உட்பட்டதாக ஏற்கெனவே பிரகடனப்படுத்தியிருக்க, இப்போது வில்பத்துவைச் சூழவுள்ள ஒரு குறிப்பிட்டளவான பகுதியையும் வனவள பிரதேசத்துக்குள் உள்ளீர்க்க முனைவது நல்லாட்சி மீதான பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புலிகளால் இனச்சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்ட வடக்கு மக்களை, இன்று இனவாதமும் சட்டமும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. காரணிகள் மாறினாலும் விளைவுகளிலும் தாக்கங்களிலும் பெரிய மாறுதல்கள் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
  முஸ்லிம்களின் பூர்வீகமான இடங்களில், வாழையடி வாழையாக வாழ்ந்த முசலி, மறிச்சுக்கட்டி, கரடிக்குழி, பாலக்குழி,கொண்டச்சி போன்ற குக்கிராமங்கள் 25 ஆண்டுகள் மக்கள் நடமாட்டம் இல்லாததால், காடுகள் வளர்ந்து, பாழடைந்த நிலையில் காணப்பட்டது. இங்கு தற்போது அந்த மண்ணின் மைந்தர்கள் பற்றைகளை அகற்றி, தமது நிலங்களை சுத்தம் செய்து, மீளக் குடியேற ஆரம்பித்துள்ளனர்.
இம்மீள்யேற்றங்களை சகிக்க முடியாத இனவாத இயக்கங்கள், பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனப்பகுதியை முஸ்லிம்கள் அழித்துச் சட்ட விரோதமாகக் குடியேறுவதாக விஷமத்தனமான பிரசாரங்கள் மேற்கொண்டு வருகின்றன. வடக்கு மக்களை மீள் குடியேற்றுவதில் கவனம் செலுத்திவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் மீதும் இனவாத விமர்சனக் கங்குகள் விசப்பட்டுவருகின்றன. அதற்கு அவர் வில்பத்துவிற்கும் தனது மக்கள் குடியேறிய பிரதேசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆதாரங்களை சமர்பித்துவருகிறார். அண்மையில் தெரண தொலைக்காட்சியில் இது விடயமாக ஆவணங்களுடன் பதில் அளித்தார்.
எனினும், 25 வருடங்களின் பின்னர் தமது பூர்விக பூமிக்கு மீண்டுள்ள அப்பாவி மக்களை அவர்களின் நிலங்களிலிகிருந்து மீண்டும் வெளியேற்றுவதே இனவாதத்தின் நோக்கமாக இருக்கிறது என்பது பல சந்தர்ப்பங்களில்  புலப்படுத்தப்பட்டுள்ளது.
காடழிப்பு
பொதுவாக இலங்கையில் காடழிப்பு பல பகுதிகளில் பரவலாக நடைபெற்றுள்ளது. 1983 – 2010 வரை யுத்தம் நிலவிய கால கட்டத்தில் புலிகள் பதுதங்குவதற்காக வன்னியில் காடுகளை உருவாக்கிய அதேவேளை, பாதுகாப்புப் படையினரோ புலிகளின் ஊடுறுவலைத் தடுக்க பெருமளவு காடுகளை அழித்தொழித்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரின் ஒத்துழைப்புடன் தற்போதும் பெருமளவு காடுகள் அழிக்கப்படுவதாக தமிழ் எம். பிக்கள் தொடர்ந்து குற்றம் சுமத்திவருகின்றனர்.
மலையகத்திலும் காடுகள் அழிக்கப்பட்டு வருவதனால், அங்கு காலநிலை வேகமாக மாற்றமடைந்து செல்கிறது. இலங்கையில் வனப் பாதுகாப்பு தொடர்பான சட்டதிட்டங்கள் கடுமையாக இருந்த போதிலும் சட்டவிரோத காடழிப்பு நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்தபடியே செல்கிறது.
எனினும், வில்பத்து சரணாலய வனாந்தரம் அழிக்கப்பட்டு வருவதாக அரசியல் தளம் முதல் இனவாத இயங்கங்கள் வரை கடுமையான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து வருகின்றன. குடியேற்றத்துக்காகவும், மரக்கடத்தலுக்காகவும் வில்பத்து வனப் பிரதேசத்தில் ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டுவிட்டதாக ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன.இனவாத இயக்கங்கள், கட்சி அரசியல் தரப்பு என்று மனிதர்களின் வாழ்விட உரிமைக்காக கரிசனை காட்டாதவர்கள் கூட காட்டுக்காக கதறியழுகின்றனர் என்றும் இவ்விகாரத்திலுள்ள உண்மை நிலைமை எதுவென்பதை அதிகாரபூர்வமாக அரச தரப்பு இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை என்ற விமர்சினம் வலுத்த போது, இது விடயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதனால், இன்று வில்பத்து சரணாலய காடழிப்பானது அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டதையும் காண முடிகின்றது.
விமர்சினங்களும் நடந்திருப்பதும்
வில்பத்து காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக தென்னிலங்கையில் கண்டனங்கள் வலுக்கின்ற அதேவேளையில், அவ்வாறான எதுவுமே இடம்பெறவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்துத் தெரிவித்து அனைவரையும் ஆச்சரயித்திற்குள்ளாக்கியுள்ளார். இனவாத அரசில் புரிந்தமை காரணமாக சிறுபான்மை மக்களின் வாக்குகளால் அட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் காலத்திலும் அங்கு குடியேற்றங்கள் நடந்தன. அவர் இதுவிடயத்தில்  வடக்கு முஸ்லிம்களுக்கு சாதகமாக இப்போது கருத்து வெளியிட்டுள்ளமை அரசியல் வாக்கு வேட்டைக்கான காய் நகரத்தலா? அல்லது உளசுத்தியுடனானதா? என்ற சர்ச்சையை கிளறிவிட்டுள்ளது.
வடக்கு முஸ்லிம்கள், வில்பத்து வனப் பகுதியை சேதப்படுத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற பொய்களென அமைச்சர் ரிஷாட் பதியூதிலும் தெரிவித்துள்ளார்.முசலி பிரதேச சபைக்குட்பட்ட முஸ்லிம்களின் பிரதேசங்களான மறிச்சுக்கட்டி,காயல் குழி, கரடிக்குழி,கொண்டச்சி போன்ற பிரதேசங்கள்  2012ம் ஆண்டு பாரம்பரிய இடம் என்ற அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக வர்த்தமானியில் இணைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சந்தர்ப்பத்தில் 1990ல் புலிகளால் வெளியேற்றப்பட்ட மக்கள் புத்தளம் பகுதியிலுள்ள நலன்புரி முகாமில் தங்கியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்பிரதேசத்தில் முன்னொரு காலத்தில் குடியிருந்து வெளியேறிய மக்களே தற்போது தமது காணிகளில் மீண்டும் குடியேறி வருவதாகவும் முஸ்லிம் மக்களும் அமைச்சர் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களும் எந்த காடழிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என அமைச்சர் ராஜித அவர்கள் கூறியுள்ளார். இக்கருத்தை மேலும் உண்மைப்படுத்தும் விதமாக வவுனியாவைச் சேர்ந்த பிக்குமார்  வில்பத்துவிற்கான களக் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர் தெரிவித்துள்ளனர். (பார்க்க நவமணி 10-01- 2017)
வில்பத்து விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென வெளியிட்ட கருத்து சில சலசலப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. வில்பத்து வனாந்தரமானது வனஜீவராசிகள் வலயமாகப் பிரகடனப்படுத்தி. காடழிப்பு குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு, இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் விரிவாக்கல் திட்டம் தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் கூட்டம் ஒன்றை அமைச்சர்கள்   ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் தலைமையில் அண்மையில் நடாத்தி இதுவிடயத்தில் ஜனாதிபதியை சந்தித்து தெளிவுபடுத்துவதாக முடிவெடுத்துள்ளனர்.
ஜனாதிபதியின் அறிவிப்பை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு  கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரையினால் பக்கச் சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு, உண்மை நிலைமை தெளிவுபடுத்தப்பட்டு, இன ரீதியான முரண்பாடுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டால் வரவேற்கத் தக்கதே!  எனினும்,  வில்பத்து சரணாலயத்தை விரிவுபடுத்தி வர்த்தமாணிப் பிரகடனம் செய்வதற்குள்ள நடவடிக்கையை எடுக்குமாறு  ஜனாதிபதி மேற்கொண்டுள்ள நடவடிக்கை பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டுள்ளது.
முஸ்லிம்களின் குடியிருப்புப் பிரதேசத்தில் ஒரு பகுதியை அரசாங்கம் வனபரிபாலன திணைக்களத்துக்கு உட்பட்டதாக ஏலவே 1879/15 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2012 இல் பிரகடனப்படுத்தியிருக்க, இப்போது வில்பத்துவைச் சூழவுள்ள ஒரு குறிப்பிட்டளவான பகுதியையும் வனவள பிரதேசத்துக்குள் உள்ளீர்க்க வர்த்தமாணி அறிவித்தல் விட ஜனாதிபதி ஆணையிட முனைவது, வடக்கு மக்களால் மட்டுமல்ல, மனிதநேயமுள்ள யாராலும் பொருந்திக் கொள்ள முடியாதவிடயமாகும்
இதேவேளை குறிப்பிட்ட அளவு வனப்பகுதியை விரிவாக்கம் மேற்கொண்டு, தற்போது வில்பத்துவை அண்டிய பகுதிகளில் சொந்தக் காணிகளில் குடியேறியுள்ள மக்களை மீண்டும் வவுனியாவில் இன்னொரு மீள் குடியேற்றம் செய்ய அரசு முனைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது இலங்கை அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தப் பிரஜைக்கும் விரும்பிய இடத்தில் குடிவாழலாம் என்ற அடிப்படை உரிமையை மீறிய  செயல் என்றும் மக்களின் பூர்வீகக் காணிகளை கையகப்படுத்தும்  தவறான நடவடிக்கை என்றும் கண்டனக் குரல்கள் எழுகின்றன. பூர்வீகக் குடிகளின் காணிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாற்றமான முறையில் கையகப்படுத்துவது நல்லாட்சிக்கு உகந்ததல்ல. அத்தோடு இது கசப்பான பாடங்களையும் புகட்டிவிடும் என்பதை கடந்த இனவாத ஆட்சிக்கு நடந்ததையிட்டு, நல்லாட்சி அரசு பாடம் படித்துக்கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

By

Related Post