Breaking
Mon. Dec 23rd, 2024

-சுஐப் எம்.காசிம் –

கடந்த ஆட்சிக்காலத்தில் சதோச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பில், விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சதொச நிறுவனத்துக்கு பொறுப்பான தற்போதைய அமைச்சர் என்ற வகையில், சில விளக்கங்களை அவர்களின் அழைப்பின்பேரில் இன்று காலை அங்கு சென்று தான் வழங்கியதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று மாலை (26/08/2016) தெரிவித்தார்.

எதிர்வரும் 29 ஆம் திகதியே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு தன்னை அழைத்திருந்த போதும், அன்றைய தினம் தனக்கு பல வேலைப்பழுக்கள் இருப்பதனால், முற்கூட்டி இன்று அந்த ஆணைக்குழுவுக்குச் சென்று அவர்கள் எதிர்பார்த்த விளக்கங்களை அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

கைத்தொழில்,வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறியதாவது,
2010 – 2015 ஜனவரி 10 ஆம் திகதி வரை சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற அரிசி இறக்குமதி தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெற்று வருகின்றது. அது தொடர்பாக அவர்கள் எதிர்பார்த்த தகவல்களை தற்போதைய அமைச்சர் என்ற வகையில், தான் வழங்கியதுடன் இனி வரும் காலங்களிலும் இந்த விசாரணை ஆணைக்குழுவுக்கு இது தொடர்பில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க எந்த நேரத்திலும் தான் தயார் என்பதையும் ஆணைக்குழுவிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அரிசி இறக்குமதி விடயத்தில் எந்தவொரு சம்பந்தமும் இல்லாத என் மீது சில ஊடகங்கள், வேண்டுமென்றே கட்டுக் கதைகளைத் திட்டமிட்டுப் பரப்பின. சிங்களப் பத்திரிகை ஒன்றும், ஆங்கிலப் பத்திரிகை ஒன்றும் சதொசவின் கடந்தகால இந்த அரிசி இறக்குமதியுடன் என்னைத் தொடர்புபடுத்தி, இந்தச் செய்தியை திரிபுபடுத்தி இனவாத சிந்தனையுடன் முன்பக்கச் செய்தியாக முக்கிய தலைப்புக்களுடன் கொட்டை எழுத்துக்களில் செய்திகளை வெளியிட்டன.

ஆணைக்குழுவினது கடிதம் எனது கைக்குக் கிடைக்கு முன்னரே, இவ்வாறான பொய்யாகப் புனையப்பட்ட செய்தியை வேண்டுமென்றே அப்பத்திரிகைகள் பிரசுரித்ததனால், அவ்விரண்டு பத்திரிகைகளுக்கும் எதிராக ஒரு கோடி நஷ்டஈடு கோரி எனது சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை கடிதம் (Letter of Demand) ஒன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளேன். இனிவரும் காலங்களில் ஊடக தர்மத்தை அவை மதித்து நடக்க வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

சதொச நிறுவனத்தை நான் பொறுப்பேற்ற பின்னர் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளேன். அந்த நிறுவனத்தை சுதந்திர நிறுவனமாக இயங்கச் செய்வதுடன், கொள்வனவிலும் போட்டித் தன்மை ஒன்றை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.

அது மட்டுமின்றி எனது அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கிய அத்தனை நிறுவனங்களையும், இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அந்தவகையில் எனது அமைச்சின் கீழான நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஒருவருட காலத்துக்குள் இலாபமீட்டச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவற்றை வெற்றிகரமானதாக்குவதற்கான காலக்கெடு ஒன்றையும் வழங்கியுள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

14159948_308641186156494_1426196506_n

By

Related Post