Breaking
Sun. Nov 17th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதிஒதுக்கீட்டில் 1000 பேருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்கள் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை(12) நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்ஷார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தவிசாளர் அவர்களின் முயற்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் அல்ஹாஜ் ரிசாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டுதலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவவி அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்தே விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இதன் போது மேலும் பேசிய தவிசாளர், இந்த நிதியானது 2018 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி ஆகையால் இதனை பெற்றுத் தருவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். எம் இஸ்மாயில் அவர்களின் பங்களிப்பு மிக அதிகமாக இருந்ததாகவும் இது நேரடியாக அவர்களது நிதியாக இருந்திருந்தால் இன்னும் அதிகமாக பெற்று அனைத்து கழகங்களுக்கும் கொடுப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்றும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் இதைவிட அதிகமான நிதியினைப் பெற்று அரசியல் பாகுபாடின்றி அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்கும் சமமான முறையில் பங்கீடு செய்ய தான் நடவடிக்கை எடுப்பதாக தவிசாளர் தெரிவித்தார்.

இதே வேளை தவிசாளரின் வேண்டு கோளுக்கு ஏற்ப கம்பரலிய வேலைத்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் இஸ்மாயில் அவர்களினால் வீதி புணர் நிர்மாண நடவடிக்கைக்கு என ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபா ஒதுக்கப்படள்ளது.

அதுமட்டுமன்றி கடந்த காலங்களில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் நிந்தவூரின் அபிவிருத்திக்காக பல கோடி ரூபாய்களை ஒதுக்கி அதற்கான வேலைகளும் பல பாடசாலைகள், பள்ளிவாசல்கள், வீதிகள் உள்ளிட்ட மக்களுக்கு பயன் மிக்க செயற்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன , ஆயிரக்கணக்கானவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன, விளையாட்டு கழகங்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கும் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளன, அண்மையில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களால் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் முகப்பு நிர்மான பணிக்காக அறுபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அடுத்த வாரம் அதன் நிர்மானப் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது, அது மட்டுமல்லாமல் இன்னும் பல கோடி ரூபாய் செலவில் பல அபிவிருத்தி திட்டங்களை நிந்தவூர் மக்களுக்காக செய்வதற்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் தயாராக உள்ளார் அதற்காக நிந்தவூர் மக்களின் தவிசாளர் என்ற வகையில் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களும், கௌரவ அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களும், விசேட அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லதீப், அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஏ.அஸ்பர்,எம.எல்.ஏ.மஜீத், எம்.எம்.சம்சுதீன், பஸீரா உம்மா,கே.எம் ஜெஸீம் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post