Breaking
Mon. Dec 23rd, 2024
விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை அங்கீகரித்த ஜனாதிபதிக்கும் அத்திட்டத்தை அறிமுகம் செய்த கல்வியமைச்சருக்கும் வாழ்த்துக் கூறியும், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனங்கள் 8 மாதங்களாக தாமதமாகி இருப்பதால் அதனை விரைவுபடுத்த கோரியும் அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்டுகிறது. அந்த வகையில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளார் எம்.ஏ.எம் தாஹிர் அவர்கள் கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
அரச பாடசாலைகளில் வகுப்பறை கற்பித்தலுக்கு அப்பால் மைதானங்களில் கடமையாற்ற 3850 தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர்களை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்திருக்கும் கல்வியமைச்சு மற்றும் அதனை அங்கீகாரித்த, சனாதிபதிக்கும் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் என்ற வகையில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒவ்வொரு மனிதர்களிடமும் வெவ்வேறுபட்ட திறமைகள் ஒழிந்திருக்கும் அதனை கண்டுபிடித்து அத்துறையில் அவர்களை முன்னேற்றுபவனே சிறந்த பயிற்றுவிப்பாளனாக இருக்க முடியும், அந்த வகையில் விளையாட்டுத் துறையில் தம்மை அர்பணித்த 3850 பேரை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக நியமனம் செய்வதன் மூலம் அடுத்து வரும் சில வருடங்களில் பாடசாலை விளையாட்டுத்துறையினை வளர்ச்சியடைய செய்ய முடியும்.
விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தோர் கடந்த காலங்களில் எமது மாவட்டத்திற்கு விளையாட்டுத்துறையில் பெருமைகளை தேடித் தந்தவர்கள். அவ்வாறானவர்களுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எனும் அந்தஸ்த்தை கல்வியமைச்சு வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறான திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை விளையாடுவதற்கு எதிர்காலங்களில் அனுமதித்து அவர்களை ஊக்குவிக்க முடியும்.
விளையாட்டு வீரர்களை நாட்டின் சொத்துக்காளாக பார்க்க வேண்டுமே தவிர அவர்களை அரசியல் கட்சி முத்திரைகளை குத்திப் பார்க்கக் கூடாது. அரசியல் துறை வேறு, விளையாட்டுத் துறை வேறு. இரண்டிற்கும் முடிச்சு போட முடியாது. விளையாட்டில் திறமைக்கே முன்னுரிமையளிக்கப்படும். எனவே தெரிவு செய்யப்பட்ட 3850 விளையாட்டு சாதனையாளர்களுள் அதிகமானோர் விளையாட்டுடன் கூடிய பட்டப்படிப்பினையும், சிலர் இராணுவ கல்லூரிகளிலும், சிலர் இலங்கை தேசிய அணியிலும் விளையாடி வருகின்றார்கள். எனவே அவர்களிடம் உள்ள அனுபவங்கள் பாடசாலை மட்டத்தில் பயிற்றுவிப்பாக வருகின்ற போது பாடசாலை விளையாட்டுத்துறை அடைவு மட்டம் சிறப்பாக அமையும்.
கடந்த 8 மாதங்களாக 3850 சாதனை வீரர்கள் நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். எனவே விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எனும் திட்டத்தை அறிமுகம் செய்த கல்வியமைச்சும், அரசாங்கமும் அதனை விரைவாக அமுல்படுத்த வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் என்ற வகையில் வினயமாக வேண்டிக் கொள்வதாக ஜனாதிபதி மற்றும் கல்வியமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
-ஊடகப் பிரிவு-

Related Post