Breaking
Sat. Nov 16th, 2024

-முர்ஷிட் கல்குடா-

விவசாயிகளாகிய நீங்கள் உரங்களை பெறுவதற்காக கிரானுக்குச் சென்று கைகட்டி நிற்கின்ற, பேசாமடைந்தைகளாக, கொத்தடிமைகளாக  இருக்கக் கூடாது என்று நாம் எதிர்பார்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.பி.ஜௌபரை ஆதரித்து, காவத்தமுனையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஓட்டமாவடி பிரதேச சபைக்குச் சேரவேண்டிய ஐந்து கிராம சேகவர் பிரிவுகளையும் மீட்டெடுக்க வேண்டும் என்று போர்கொடி தூக்குகின்ற போது யாரும் இதில் அக்கறை கொள்வதில்லை.

இதில் மீராவோடை, காவத்தமுனை மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். உங்களுடைய ஒப்பத்திற்கு, உரத்திற்கு போக வேண்டியது கிரான் பிரதேச செயலகத்திற்கு. தண்ணீர் துறக்க வேண்டும் என்றால் எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். விவசாயம் செய்வதற்கு  எதிர்கொள்கின்ற பிரச்சினைககளை யோசித்திருந்தால் இன்னுமொரு அணி தேர்தலில் களம் இறங்கியிருக்காது.

ஓட்டகத்தில் களம் இறங்கியவர்கள் கடந்த காலத்தில் காவத்தமுனையில் வீதி போட வேண்டும், உயர்தரம் பெற்றுத் தர வேண்டும், பள்ளிவாயலுக்கு நிதி, வடிகாலமைப்பு வசதிகள், வாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்கச் செய்ய வேண்டும் என்று எங்காவது கோரிக்கை விடுத்திருக்கின்றார்களா? இல்லை.

அண்மையில் வந்த ரவூப் ஹக்கீம் காவத்தமுனை, மாஞ்சோலை, ஓட்டமாவடிக்கு வந்து அபிவிருத்தியடையவில்லை என்று நீலிக்கண்ணீர் வடித்து சென்றுள்ளார். 17 வருடத்திற்கு பிறகு வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார் என்றால் இவர்கள் கேவலப்பட்டவர்கள் என்று சொல்லலாம்.

கிழக்கு மாகாணத்தில் மாத்திரமல்ல இலங்கையில் அமைக்கப்படாத மூன்று மாடிகளைக் கொண்ட பிரதேச செயலகத்தை காவத்தமுனையில் கட்டுகின்றோம் என்று சொன்னால், காவத்தமுனை நகரமாக மாற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தான்.

இதன் மூலம் கல்வி, தொழில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் பட்டதாரிகள் இருக்க வேண்டும் என்கிற ஆசையை நிவர்த்தி செய்யவே இவ்வாறான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றோம்.

விவசாயிகள் உரங்களை பெறுவதற்கு கிரானுக்கு சென்று கைகட்டி நிற்கின்ற, பேசா மடைந்தைகளாக, கொத்தடிமைகளாக நீங்கள் இருக்கக் கூடாது என்று எதிர்பார்க்கின்றோம். இதனால், வாழைச்சேனையில் பெற்றுக்கொள்ளக் கூடிய வழிவகைகளை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றார்.

 

 

 

Related Post