பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு நாம் இடமளிக்க போவதில்லை. அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று அல்ல, நூறு நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டு வந்தாலும் எமக்கு பிரச்சினையில்லை. நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் எம்மிடமே உள்ளது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிரதமர் மாத்திரமின்றி முழு அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய பாராளுமன்றத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். இந்ந சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை என்பது அர்த்தமற்ற செயலாகும். பிரதமருக்கு எதிரான நம்பிக்கை யில்லா பிரேரணைக்கு பெரும்பான்மையோர் கையொப்பமிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி யின் தலைமையகமான சிறிக்கொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக எதிர்க்கட்சியினரால் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்திகள் தற்போது பரப்பப்பட்டு வருகின்றன.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை நாம் மக்களுக்கு வழங்கினோம். இதன்பிரகாரம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக்கப்படுவார் என் றும் ஐ.தே.க தலைமையில் புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் என்றும் தேர்தல் விஞ்ஞாபனத் தில் குறிப்பிட்டிருந்தோம். இதன்படியே ரணில் விக்கிரமசிங்க பிரதமராக்கப்பட்டாரே தவிர நினைத்தபடி ஜனாதிபதி அவரை நியமிக்கவில்லை. ஜனநாயகத்தின் அடிப்படை அறிவு கூட இல்லாத எதிர்க்கட்சிகள் சிறுப்பான்மை அரசாங்கம் என்ற பெயரில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்நிலையில் பெரும்பான்மை அரசாங்கம் செய்யாத வேலைத்திட்டங்களை சிறுப்பான்மை அரசாங்கம் என்ற வகையில் நாமே முன்னெடுத்தோம். தற்போது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம். எனவே நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. எமக்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது.
தற்போதைய சிறுப்பான்மை அரசாங்கத்தினால் எந்த பிரயோசனமும் இல்லை. எமது அரசாங்கத்தின் நல்லாட்சித் திட்டங்களுக்கு பெரும்பான்மை பலம் கொண்ட எதிர்க்கட்சி பெரும் முட்டுக்கட்டையாகவே உள்ளது.
இதற்கமைய அரசாங்கத்தினால் கொண்டு வரத்திட்டமிட்ட அனைத்து சட்டமூலங்களும் முடக்கப்பட்டுள்ளன. எமது தி்ட்டங்களுக்கு எதிர்க்கட்சி ஆதரவு நல்க போவதில்லை. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கும் கூட நாயை குளிப்பாட்ட கூட்டிக் கொண்டு செல்வது போன்று எதிர்க்கட்சிகளின் ஆதரவினை திரட்டினோம்.
எனினும் இந்த சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதென்பது காலத்தை வீணடிக்கும் அரத்தமற்ற செயலாகும். இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஒன்று அல்ல, நூறு நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டு வந்தாலும் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாம் எதிர்க்கட்சிகளின் சிறுப்பிள்ளைத்தனமான காரியங்களுக்கு அஞ்சப்போவதில்லை.
நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுக்கும் அதிகாரம் அரசாங்கம் என்ற வகையில் எம்மிடமே உள்ளது. ஆகையால் பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கு நாம் இடமளிக்க போவதில்லை. பெரும்பான்மை பலம் எதிர்க்கட்சிகளிடம் இருப்பதினால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்தால் நாம் தோல்வி அடைவது யாவரும் அறிந்த விடயமாகும்.
ஆகவே இந்த பாராளுமன்றத்தினால் எதுவும் செய்ய இயலாது. இதன்பிரகாரம் பிரதமர் மாத்திரமின்றி முழு அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய பாராளுமன்றத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.
ஜீ.எல்.பீரிஸூக்கு விடுக்கும் சவால்
இதேவேளை முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அரசாங்கத்திற்கு் எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். எனினும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் யுத்த குற்றம் தொடர்பில் தருஸ்மன் குழுவினை இலங்கைக்கு வரவழைத்தது மாத்திரமின்றி அறிக்கையை தயாரிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸே கோரியிருந்தார்.
இராணுவ வீரர்களினால் வென்றெடுக்கப்பட்ட நாட்டை காட்டிக்கொடுத்து விட்டு தேசப்பற்றுள்ளவர்களை போன்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் தற்போது ஜீ.எல். பீரிஸ் நல்லாட்சித் திட்டங்களை செயற்படுத்தவிடாமல் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு சவால்களை விடுத்து வருகின்றார்.
விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆட்சி அமைத்தாலும் தேசிய பட்டியலின் ஊடாக அமைச்சு பதவிபெற்றிருக்கும் ஒரேயொருவராக இவர் காணப்படுகின்றார். எமது இந்த ஆட்சியிலும் கூட அமைச்சு பதவி தருவதாக ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால் கூட உடனே எமது வேலைத்திட்டஙகளுக்கு ஆதரவு நல்குவார்.
எனவே நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் முடியுமாக இருந்தால் முன்னாள் ஜீ.எல் பீரிஸ் பகிரங்க விவாததிற்கு வரவேண்டும் என்று சவால் விடுக்கின்றோம் என்றார்.