பாலத்துறை கஜுமா தோட்டத்தில் சட்டவிரோத குடியிருப்புக்கள் உடைக்கப்பட்டுள்ளமையினையடுத்து அங்கு வசித்த மக்களுக்கு தமது வதிவிடம் தொடர்பில் மாற்று நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கான அனைத்து ஒத்துழைப்புகளை வழங்க தயாராக இருக்கின்றோம் என்று கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி செயலாளருமாகிய அக்கிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தை அடிபடையாக கொண்டு ஒரு சிலர் அரசியல் இலாபம் தேட முனைவதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
பாலத்துறை கஜுமா தோட்டத்தில் வீடுகள் அகற்றப்பட்டமை தொடர்பிலும் அதற்கு அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்தமை உள்ளிட்ட சில விடயங்கள் குறித்தும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி செயலாளரும் கல்வி அமைச்சருமாகிய அக்கிலவிராஜ் காரியவசம் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கடந்த திங்கட்கிழமை பாலத்துறை பிரதேசத்தில் உள்ள கஜுமா தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சில குடியிருப்புக்கள் சட்டவிரோதமானவை என்ற காரணத்தின் அடிப்படையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினரினால் பலத்த பொலிஸ் பாதுகாப்பின் அடிபடையில் வீடுகள் அகற்றப்பட்டன. அந்தவகையில் இதற்கு அப்பிரதேச மக்கள் பாதைகளை முற்று முழுவதுமாக மறைத்து அன்றைய தினம் முழுவதிலும் எதிர்ப்பு நடவடிக்கையை வெளிப்படுத்தினர்.
இவ்வாறான நிலையில் இது தொடர்பில் மேல்மாகாண மற்றும் மாநாகர அபிவிருத்தி அமைச்சானது முழுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். குடியிருப்புகளிலிருந்து அகற்றப்பட்ட மக்களுக்கான மாற்று நடவடிக்கையினை விரைந்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எவ்வித அறிவுறுத்தல்களுமின்றி எமது அரசாங்கத்தின் கீழ் நடைபெறுவதானது கட்சியின் கொள்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் அப்பாற்ப்பட்டது. எனவே இது தொடர்பில் நியாயத்தன்மையை உறுதிப்படுத்த நாம் தயாராகவே உள்ளோம்.
மறுபுறம் இவ்விடயத்தை அடிப்படையாக கொண்டு ஒருசிலர் அரசியல் இலாபத்தை பெற மறைமுகமாக முயற்சிக்கின்றனர். எனவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. நல்லாட்சி அரசின் கீழ் இப்பிரதேச மக்களுக்கு உரிய தீர்வினை முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.