ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை கிராம சேவகர் பிரிவில் செமட்ட செவண வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.
ஒட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடி நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.
ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, உதவி பிரதேச செயலாளர் ஏ.அப்கர், செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.றுவைத், கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.பஸ்மி, தேசிய வீடமைப்பு அதிகார சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.நளீர், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஜௌபர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் செமட்ட செவன வீடமைப்பு திட்டத்தின் மூலம் சூடுபத்தினசேனையில் இருபத்தைந்து வீடுகளைக் கொண்டதாக இரண்டு கிராமங்களும், காகிதநகர் பகுதியில் இருபத்தைந்து வீடுகளைக் கொண்ட கிராமத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
இவ்வீட்டுத் திட்டமானது அரசாங்கத்தினால் ஐந்து இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படவுள்ளதுடன், வீட்டினை பூர்த்தி செய்யும் மிகுதிப் பணத்தினை மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் என தேசிய வீடமைப்பு அதிகார சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.நளீர் தெரிவித்தார்.
-முர்ஷித் கல்குடா-