எம்.எச்.எம்.அன்வர்
புதிய காத்தான்குடி பாம் வீதியை புனருத்தாரனம் செய்யுமாறு கோரி மக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று நடாத்தினர்.
மிக நீண்ட காலமாக புனருத்தாரனம் செய்யப்படாமல் குண்டும் குழியுமாக காட்சி தரும் இவ்வீதிக்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதற்கு தடையாக மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் இருப்பதாகவும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதிமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளா தெரிவித்ததாக ஆர்ப்பாட்டத்தின்போது மக்கள் தெரிவித்தனர்.
இதற்கான உண்மை நிலைப்பாட்டினை அறிவதற்காகவும் அதை மக்களிடம் தெளிவுபடுத்துவதற்காகவும் சம்பந்தப்பட்ட மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் மற்றும் நகர சபை தவிசாளர் அஸ்பர் ஆகியோர் ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அத்துடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம். அப்துல் றஹ்மான் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான யூ.எல்.எம்.என். முபீன் மற்றும் கே.எல்.எம். பரீட் ஆகியோரும் இம்மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து கருத்துக்களை தெரிவித்ததுடன் இவ்வீதியை போடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் மக்கள் முன்னிலையில் உறுதி மொழி வழங்கினர்.
அதேவேளை, மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் தன் மீது சுமத்தப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பொலிசில் முறைப்பாடு ஒன்றினை செய்யவுள்ளதாக தெரிவித்ததுடன் தான் குத்தகைக்காரரிடம் எவ்வித தொடர்பினையும் வீதியை தடைசெய்வதற்கான வேலைகளில் ஈடுபட வில்லை எனவும் மகநகம தனியார் கம்பனியின் ஊடாக செய்வதற்காக ஒதுக்கப்பட்ட 11 கோடி ரூபா பொய்யான விடயம் எனவும் 6.5 கோடியே ஒதுக்கப்பட்டது எனவும் பொய் சொல்லி பித்தலாட்டம் செய்து களவெடுத்து அரசியல் செய்யவேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை அவ்வாறு நிறூபித்தால் பதவியிலிருந்து ராஜினாமா செய்வேன் எனவும் தெரிவித்தார்.