– ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம் –
2014 ஆம் ஆண்டு கொலம்பியாவில் நடைபெற்ற உலக நகர மகாநாட்டில் விமல் வீரவன்சவின் புதல்வரான விபூதி விஸ்வஜித் வீரவன்ஸ எந்த அடிப்படையில் பங்கேற்றார். தந்தை பாசம் தான் காரணமா என ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரான நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று வியாழக்கிழமை பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் முற்பகல் 10.30க்கு பாராளுமன்றம் கூடியது. இதன்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜே.வி.பி. எம்.பி.யான நளிந்த ஜயதிஸ்ஸ வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சரிடத்தில், 2014 ஆம் ஆண்டு 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் கொலம்பியாவில் நடைபெற்ற உலக நகர மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கைக் குழுவினரின் பெயர் விபரங்கள், செலவீனம், அவர்கள் தெரிவு செய்யப்பட்ட முறைமை, பாடசாலை மாணவன் கலந்து கொண்டமை, அதற்கான அமைதி வழங்கப்பட்டமை தொடர்பாக கேள்விகளைத் தொடுத்திருந்தார்.
அவ்வினாக்களுக்கு பதிலளித்த வீடமைப்பு நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் இந்திக்க குணவர்த்தன பதிலளிக்கையில்,
அப்போதைய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராகவிருந்த விமல் வீரவசன்ஸவின் தலைமையில் அமைச்சின் செயலாளர், ஒருங்கிணைப்பு செயலாளர், நகர அபிவிருத்தி சபையின் தவிசாளர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த விஜயத்தின்போது விமல் வீரவன்சவின் புதல்வரான விபூதி விஸ்வஜித் வீரவன்ச எனப்படும் பாடசாலை மாணவன் பங்கேற்றுள்ளார். இவருக்கான அனுமதியை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது. அக்குழுவை அப்போதைய அமைச்சரே தெரிவு செய்துள்ளார் என்பதோடு ஜனாதிபதி செயலகமும் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண,
குறித்த பாடசாலை மாணவர் அமைச்சரின் மகன் என்பதை அமைச்சர் அறிவாரா? இவ்வாறு அரச பயணங்களில் இணைத்துக்கொள்கின்றமையானது ஒழுக்கமான நடவடிக்கையொன்றாவெனக் கேள்வியெழுப்பினார்.
அது தொடர்பாக தான் எவ்விதமான தகவல்களையும் பெற்றிருக்கவில்லையென பிரதியமைச்சர் பதிலளித்தார்.
தொடர்ந்து குறித்த பாடசாலை மாணவன் எந்த அடிப்படையில் அந்த விஜயத்தில் பங்கேற்றார். அவருடைய விஜயத்திற்கும் அரச நிதியே செலவிடப்பட்டிருக்கின்றது. இவ்வாறான அரச விஜயத்தில் மற்றுமொரு வீரவன்ஸ பங்கேற்றமைக்கு காரணம் என்ன? தந்தையின் பாசம் தான் காரணமா எனக்கேள்வியெழுப்பினார்.