Breaking
Mon. Nov 25th, 2024

கடந்த பொதுத்தேர்தல்களுக்கு முன்பிருந்தே இலங்கை முஸ்லிம்களிடையே அமைச்சர் றிஷாட் பதியுதீனைப் பற்றி ஒரு நல்லபிப்பிராயம் வளரத் தொடங்கிற்று.

90ல் இனச்சுத்திகரிப்பின் பேரில் அகதிகளாக்கப்பட்ட வடமாகாணத்தின் முஸ்லிம்களின் நிலை பற்றி நெஞ்சு பதறாத முஸ்லிம்களே இல்லை. குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்களிடம், வடமாகாண முஸ்லிம்கள் மீதான அநுதாபமும் அக்கறையும் மனதை சதா உறுத்திக்கொண்டே இருந்தது. அதேபோன்ற அநியாயங்கள், அக்கிரமங்கள் தொடர்பாக அரைகுறையான அவஸ்தைகளை அவர்களும் அநுபவித்திருந்தார்கள். வடமாகாண முஸ்லிம் அகதிகளுக்கு விரைவில் விடிவு ஏற்படவேண்டுமென்ற பிரார்த்தனை, அவர்களின் நெஞ்சில் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. வடமாகாண முஸ்லிம்கள் தம்மைப்போல் வடக்கு, கிழக்கு தமிழ்மொழி மாநிலத்தின் இரண்டாவது பெரும்பான்மைச் சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு வடக்கு கிழக்கில் ஒரே மொழியைப் பேசி, ஒரே விதமான  கலாசாரத்தைப் பின்பற்றி, பொதுவான வாழிடத்தையும் பொதுவான பொருளாதார நடவடிக்கைகளையும் கொண்டிருந்தார்கள்.

இந்தப் பொதுமொழி, பொதுக்கலாச்சாரம், பொது வாழிடம், பொதுப்பொருளாதாரம் ஆகிய நான்கு அம்சங்களும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களை ஒரு தனித்த, பிரத்தியேகமான தேசியமாக சர்வதேச சட்டங்களால் அங்கீகரிக்கப் போதுமானவையாக இருக்கின்றன. அத்தோடு தமிழ் தேசியத்தினால் வேறானவர்கள் எனக்காட்டப்பட்டு விரட்டியடிக்கப்பட்டதன் மூலம், வடக்கு,  கிழக்கு முஸ்லிம்களை ஒரு தனித்த தேசியமாக வளரவைத்தது தமிழ்தேசியம் தான் என்பது நாடறிந்த உண்மையாகும்.

அதனால், வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுமிருந்தும் கடைசி முஸ்லிமும் வெளியேற்றப்பட்ட இறுதி நாளான 1990 ஒக்டோபர்  30 தான்  இந்த நாட்டில் இருந்த சிங்கள பௌத்ததேசியத்தோடும் தமிழ்த்தேசியத்தோடும் மூன்றாவது தேசியமாக முஸ்லிம் தேசியம் பிறந்த நாளாகும். பிரசவம் பார்த்த தாதிமார் தமிழ்த்தேசியத்தினர் தான்.

அதனால் இதன் பின்னராவது வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் ஒக்டோபர் 30ஐ முஸ்லிம் தேசியம் உதயமான நாளாக வருடா வருடம் கொண்டாட வேண்டும்.

இந்த வடக்கு முஸ்லிம் தேசியத்தின் தலைமைத்துவத்தை தூக்கிச் சுமக்க, காலம் படிப்படியாக ஒரு முஸ்லிம் தேசிய வடமாகாண அகதியை உருவாக்கி ரிஷாட் பதியுதீன் மூலம் வெளிப்படுத்தியது. அவரில் கிழக்கின் முஸ்லிம் தேசியத்துக்கு ஏற்பட்டிருந்த அலாதிப்பிரியம் அவரை கிழக்கை நோக்கி இழுக்கத் தொடங்கிற்று.

முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகப் போட்டியிட்டு ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வடக்கின் வன்னி மக்களால் தெரிவு செய்யப்பட்டார். இந்தப் பதவியூடாக வடக்கு முஸ்லிம் தேசியத்தின் பாரங்களைப் படிப்படியாகக் குறைக்க வேண்டுமென்ற பேரவா  அவர் நெஞ்சில் நீறுபூத்த நெருப்பாயிற்று. முஸ்லிம் காங்கிரஸின் மூலம் முஸ்லிம் தேசியத்தின் எதிர்பார்ப்புகளை இலகுவில், விரைவில் அடையமுடியாது என்பதை ரிஷாட் அறிந்து கொள்ள அதிககாலம் தேவைப்பட்டிருக்கவில்லை. அவரை அகதியாக்கி, வன்னி முஸ்லிம்களின் தலைவராக்கிய அதே விதி அவரை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேற்றியதுடன், அவர் ஒரு அமைச்சர் பதவியை அடைந்து கொள்ளவும் வழிசமைத்தது. அதனால் வடக்கு முஸ்லிம் அகதிகளின்  வாழ்வில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று இருளகற்றத் தொடங்கிற்று.

வடக்கு முஸ்லிம்களின் அத்தியாவசிய அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றும் இமாலயப்பொறுப்பை றிஷாட் அவசியத்தின் பேரிலும், நம்பிக்கையோடும் தனது தோளில் சுமக்கத் தொடங்கினார். அதில் குறிப்பிட்ட அளவு வெற்றியும் கண்டார்.

அதற்குப்பின்னர் வந்த காலங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்ததும், அடுத்து முளைத்த ஆட்சியிலும் அமைச்சர் பதவியை; பெற்றதும்  அவரை வளர்த்தெடுத்த வரலாற்று நிகழ்ச்சிகளாகும். இந்தத் திருப்பங்களும், தகுதிகளும் வடமாகாண முஸ்லிம்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. அதனால் அவர்களின் வாழ்வில் வசதிகள் அதிகரிக்கப்பட்டன.

இந்த வளர்ச்சிகளால் அதிகரிக்கத் தொடங்கிய வடக்கு முஸ்லிம்களின் முற்றான சுபீட்சத்துக்காய், பூரண விடுதலைக்காய் பிரார்த்தித்துக் கொண்டிருந்த கிழக்கு முஸ்லிம் தேசியம் றிஷாட்டின் மீது அன்பையும், அதிகரித்த நம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டது. அவரை ஆதரித்து அவரது பலத்தை படிப்படியாக அதிகரித்து அவரை வடக்கு – கிழக்கு முஸ்லிம் தேசியத்தின் தலைமை போராளியாக்கும் எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டது.

அந்தத் திசையில் 2015 பாராளுமன்றத் தேர்தலில் அவரது மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும்  போட்டியிட்டு திருகோணமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் மாவட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்தது. வன்னியில் அவரும் வெற்றி கண்டார்.

30 வருட காலம் முஸ்லிம்களை ஒருவித எதேச்சதிகாரத்தோடு அடக்கியாண்டு வந்த முஸ்லிம் காங்கிரஸை, திருகோணமலை மாவட்டத்தில் ஒரு தசாப்த கால வரலாறுடைய மக்கள் காங்கிரஸ் தோற்கடித்தது சரித்திரத்தை மெய்சிலிர்க்கச் செய்த திருப்பமாகும். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் றிஷாட் பதியுதீனில் வைத்திருந்த தமது நம்பிக்கையை பாராளுமன்றம் வரை உயர்த்திக்காட்டினர்.

அம்பாரை மாவட்டத்தில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் காங்கிரஸ் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை இழந்தது. அம்பாரை முஸ்லிம்கள் றிஷாட்டில் வைத்திருந்த நம்பிக்கையில் எந்தக்குறைவும் இந்தத் தோல்விக்குக் காரணமாக அமையவில்லை. மாறாக மக்கள் காங்கிரஸில் தேசியப்பட்டியலைக் குறிவைத்திருந்த பதவிமோகக்காரர்களின் திருகு தாளங்களே இந்தத் தோல்விக்குக் காரணமாக இருந்தனவாகச் சொல்லப்படுகின்றது. இந்தத் தோல்வி றிஷாட்டை கலக்கமடையச் செய்யவில்லை. மாறாக பொறுப்புக்களை அதிகரிக்கவே செய்தது.

இருந்தும் மக்கள் காங்கிரஸின் வளர்ச்சியானது நம்பிக்கையின் அடிப்படையில் கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களினதும், றிஷாட்டின் அமைச்சின் கீழ் தவிசாளர்கள் போன்ற பதவிகள் வழங்கப்பட்டவர்களின் பொறுப்பில் விடப்பட்டது.

துரதிர்ஷ்ட வசமாக கட்சிக் கட்டமைப்பு வேலைகளிலும், கட்சி வளர்ச்சி முயற்சிகளிலும், பிரசார செயற்பாடுகளிலும் அவர்களுடைய பங்களிப்புகள் பரிந்துரை செய்யுமளவு பிரகாசிக்கவில்லை.

கிழக்கு முஸ்லிம்களின் றிஷாட் மீதான அபிமானத்தை அதிகரிப்பதற்கான, கட்சியை வளர்ப்பதற்கான அம்சங்கள் மக்கள் காங்கிரஸின் மேற்சொன்ன இரண்டாம் கட்டத்தலைவர்களின் பிரசாரங்கள் எதனிலும் இடம் பெற்றிருக்கவில்லை. றிஷாட்டின் பதவியிலும், அலையிலும் தம்மைப் பங்காளிகளாக்கிக் கொண்ட பெருமையோடு மேற்புல் மேய்ந்து  கொண்டிருந்தவர்களாகவே அவர்கள் நடந்து கொண்டார்கள்.  அவர்களது தப்புக்கணக்குத் தேர்தல் முடிவுகள் றிஷாட்டின் தலையைக் குனிய வைத்தன. பின்னடைவையும் சந்திக்க வைத்தன. எனினும் இந்த அளவிலாவது மட்டுப்படுத்தப்பட்ட வெற்றிகளைப் பெறுவதற்கு றிஷாட்டின் மீதான முஸ்லிம்களின் அநுதாபமும், அபிமானமும் தான் காரணமாய் அமைந்தன.

இன்னும் இந்த வெற்றிகளை அதிகரித்துக் கொள்வதற்கு நாடுபூராவுமான றிஷாட்டின் பிரசாரக் கூட்டங்களும் வேலைகளும் தடையாய் இருந்தமை தவிர்க்க முடிந்திராத சோதனையாகும்.

எல்லாவற்றையும் விட மிக முக்கியத்துவப் பட்டிருந்த காரணம் தேர்தல்களுக்கு முகம் கொடுத்த முஸ்லிம்களின் மனதை வெல்ல மக்கள் காங்கிரஸ் எதுவித செய்தியையும் முன்வைக்கவில்லை என்பதுதான்.

றிஷாட்டை வெல்லச்செய்து வடக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மக்களாணையை றிஷாட்டிற்கு வழங்கினால், அந்த அதிகாரத்தைக் கொண்டு வடக்கு கிழக்கு முஸ்லிம் தேசியத்தின் எந்தப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பார்? எந்தெந்த உரிமைகளை வென்றெடுப்பார்? எவ்வெவ்வாறு முஸ்லிம்களின் வாழ்க்கையை மேம்படுத்துவார்? என்பவை போன்ற குறிப்பிடத்தக்க எதையுமே மக்கள் காங்கிரஸ் முன்வைத்து மக்களாணையைக் கேட்கவில்லை. அதனால் மக்கள் காங்கிரஸிற்கு வாக்களிப்பதை விட கூனோ குருடோ  தமது புராதன முஸ்லிம் காங்கிரஸுக்கே வாக்களிக்க வேண்டுமென்று பெரும்பாலான முஸ்லிம்கள் இஷ்டமில்லாமலேயே வாக்களிக்க வேண்டியதாயிற்று.

இந்தக் குறைபாடுகளை மனதில் இருத்திக் கொண்டு, இவற்றைக் களைந்து அகற்றி மீண்டும் கிழக்கு முஸ்லிம்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டிய செயற்பாடுகளை முன்னெடுப்பது மக்கள் காங்கிரஸுக்கு அவசியமானதாகும்.

கிழக்கின் பெறுபேறுகளை எண்ணி தளர்ச்சி அடையாது அதனை ஒரு நல்ல பாடமாகவும், சகுனமாகவும் எடுத்துக் கொண்டு திட்டமிட்ட ரீதியில் பயணத்தை தொடங்க வேண்டியதே இப்போதைக்குச் செய்வதற்கு உள்ளதாகும்.

இன்னும் இரண்டு வருடத்தின் பின்னால் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தல்களுக்கு நம்பிக்கையோடு முகம் கொடுக்கும் நிலையை அடிமட்டத்திலிருந்து ஆக்கபூர்வமாக முன்னெடுக்க வேண்டியிருக்கும். அதற்கு இன்னும் ஆறு மாதங்களில் வரச்சாத்தியமான மாகாணசபைத் தேர்தல்களை ஒருவரப்பிரசாதமாக எடுத்துக்கொண்டு திட்டமிட்டுச் செயற்பட முடியும்.

வட்டார ரீதியான, உள்ளுராட்சி சபை ரீதியான, தொகுதி ரீதியான, மாவட்ட ரீதியான, மாகாண ரீதியான அமைப்பாளர்களை நியமித்துக் கொள்வது உடனடியாகச் செய்யப்பட வேண்டிய விடயமாகும். மாதாந்தக் கூட்டங்கள் இடத்துக்கிடம் நடாத்தப்பட வேண்டும். அமைப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட வேண்டும். அநுபவங்கள் ஆராயப்பட்டு அடுத்த கட்டத்துக்கு நகர  வேண்டும்.

மாகாண சபைத்தேர்தல்களுக்குத் தகுதியானவர்கள் தெரியப்பட்டு மக்கள் அறிமுகத்திற்காக காலவரையுமின்றி களமிறங்க செய்யப்பட வேண்டும்.

கட்சியின் யாப்பு மீளாய்வு செய்யப்பட்டு அபிப்பிராயங்களுக்கு விடப்பட வேண்டும். கட்சியின் கொள்கை கோட்பாடுகள் தேச மட்டத்தையும் தேசிய மட்டத்தையும் உள்வாங்கி உருவாக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் தேசியப்பிரச்சினைக்கான தீர்வு வழிகள் முதல் இடம்பெற வேண்டும்.

உள்ளுராட்சித் தேர்தல்களில் கற்ற பாடங்களை சிரத்தையோடு மனதில் இருத்தி படிப்பினைகளை மாகாண சபைத் தேர்தல்களில் பரீட்சித்துப் பார்த்து முன்னேற முயற்சிக்க வேண்டும்.

 

 

 

 

Related Post