ஆயுர்வேத சுகாதார பணியாளர்கள் கடந்த 7 நாட்களாக முன்னெடுத்த பணிபகிஸ்கரிப்பானது சுகாதார அமைச்சுடன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 நாட்களாக தமது ஆயுர்வேத பணியாளர்கள் முன்னெடுத்து வந்த போராட்டமானது நேற்று (20) மாலை அமைச்சின் செயலாளருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அவரின் சாதகமான பதிலை அடுத்து நிறைவுக்கு வந்துள்ளதாக அகில இலங்கை ஆயுர்வேத சுகாதார சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த குருகே தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்றைய ஆர்ப்பாட்டமானது பொரல்லை ஆயுர்வேத வைத்தியசாலையில் இருந்து ஆரம்பித்து இது சுகாதார அமைச்சு வரை சென்றதாகவும் இதன் போது ஆர்பாட்டத்தில் பங்கு கொண்டவர்கள் சுகாதார அமைச்சுக்குள் உள்நுழைய முற்பட்ட வேளை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிறகு அமைச்சரின் செயலாளருடன் ஆயுர்வேத சுகாதார சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துரையாட அனுமதி வழங்கப்பட்டதுடன் ,தமது பணியாளர்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சுகாதார அமைச்சு இணங்கியமைக்கு அமைய ஆயுர்வேத சுகாதார பணியாளர்கள் தமது பணிபகிஸ்கரிப்பை கைவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.