Breaking
Sun. Dec 22nd, 2024

வெற்றிலை போட்டால் உடம்புக்கு கேடு. அதுபோல, வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்குப் போட்டால் நாட்டுக்கே கேடு என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கிராமங்களில் வாழ்பவர்கள் தங்களுடன் இருப்பதாகவும், நகரங்களிலேயே எதிரணிக்கு செல்வாக்கு இருப்பதாகவும் மஹிந்த அரசாங்கம் ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டுள்ளது.

இது அப்பட்டமான பொய். கிராமங்களையும், நகரங்களையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒருசேர ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி விட்டார்கள். மலரும் புதிய ஆண்டில் எனது இந்த கூற்று உண்மை என சந்தேகமற நிரூபிக்கப்படும்.

இந்த நாடு, இந்தியாவோ, சீனாவோ இல்லை. இது ஒரு சிறிய நாடு. இங்கு குக்கிராமங்கள் இல்லை. இங்கே நகரங்களில் வாழ்பவர்களுக்கும், கிராமங்களில் வாழ்பவர்களுக்கும் நிரந்தர உறவுகள், தொடர்புகள் இருக்கின்றன.

சித்திரை புது வருட தினங்களில் பாருங்கள். இந்த கொழும்பு நகரமே யாரும் இல்லாத மாயானமாகி விடும். கடைகள் மூடப்பட்டு, உணவகங்கள் மூடப்பட்டு விடும். இது ஏன்? இங்குள்ள மக்கள் தங்கள் கிராமங்களுக்கு போய் விடுகிறார்கள். இங்குள்ள செய்திகள் அங்கும், அங்குள்ள செய்திகள் இங்கும் நொடியில் பரிமாறப்படுகின்றன.

எனவே வெற்றிலை போட்டால் உடம்புக்கு கேடு. வெற்றிலைக்கு போட்டால் நாட்டுக்கு கேடு என்று நகரங்களில் வாழ்பவர்களுக்கும், கிராமங்களில் வாழ்பவர்களுக்கும் ஒருசேர தெரியும்.

கிராமங்களில் வசிப்பவர்கள் விஷயம் தெரியாதவர்கள் அல்ல. நமது பிரச்சாரம் இப்போது கிராமங்களையும் சென்று அடைந்துள்ளது. இந்த நாட்டில் கிராமங்களுக்கும், நகரங்களக்கும் இடையில் நல்ல போக்குவரத்தும், தகவல் தொடர்பும் உள்ளன. அத்துடன் இங்கே நகரங்களில் வாழ்பவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. கிராமங்களில் இருந்து தொழில் தேடி வந்து குடியேறியுள்ளவர்கள்தான், இன்று நகரங்களில் பெரும்பாலும் வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் கிராமத்து உறவை தொடர்ந்து பேணி வருகிறார்கள்.

எனவே இந்த நாட்டை நகரங்கள் என்றும், கிராமங்கள் என்றும் கூறு போட்டு மக்களுக்கு தவறான தகவல் தரும் அரசின் எண்ணம் சாத்தியமாகாது. நேற்று நான் வடக்கில் பிரச்சாரம் செய்து விட்டு வந்தேன். அதேபோல் கிழக்கிலும், மலையகக்திலும் முதல்கட்ட பிரச்சாரம் சென்றிருந்தேன்.

வடக்கிலும் கிழக்கிலும் நகரங்களிலும், கிராமங்களிலும் வாழும் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் காட்டாறு போல் கரைபுரண்டு ஆட்சி மாற்றம் என்ற திசையை நோக்கி ஓடத்தயாராகி நிற்கின்றன. மலையகத்திலும் அதே நிலைமைதான் நிலவுகிறது. உண்மையில் சொல்லப்போனால், ஆட்சி மாற்றம் என்ற இலக்கை நோக்கி யார் அதிகமாக யார் வாக்களிக்க போகின்றோம் என்பதில் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளுக்கு இடையில் ஒரு ஆரோக்கியமான போட்டியே நிலவுகிறது.

இந்நிலையில், நாடு முழுக்க வாழும் சிங்கள மக்கள் மத்தியில் முதன் முறையாக, இந்த அரசாங்கத்துக்கு எதிராக பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. சிங்கள மக்கள் மத்தியிலான போலிஸ், இராணுவம், அரசாங்க ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் ஆகியோர் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதை நான் சென்ற தென்னிலங்கை கிராம, நகரப்புற பிரச்சார மேடைகளில் இருந்து காணக்கூடியதாக உள்ளது.

மக்களின் மனசாட்சியை அறியாதவர்களுக்கும், மனசாட்சியை பணத்துக்கும், சொந்த சுக வாழ்க்கைக்கும் என்று விலை பேசி விற்றவர்களுக்கும் இந்த உண்மை புரியாது. ஆனால், எமக்கும், எம்முடன் இருக்கும் மக்களுக்கும் இது புரிகிறது. எனவே நாட்டின் எந்தப்பகுதியில் வாழ்ந்தாலும், வாக்குரிமையுள்ள ஒவ்வொரு தமிழ் பேசும் வாக்காளரும் தமது வாக்குகளை அன்னப்பறவை சின்னத்துக்கு துணிச்சலுடனும், நம்பிக்கையுடனும் வழங்க வேண்டும்.” என்றுள்ளார்.

Related Post