பாரிய போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலே சுதாவிற்கு எதிராக வழக்கு தொடர முடியாதென அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
வெலோ சுதாவிற்கு எதிரான வழக்கு அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக 17 கோடி ரூபா பணம் மற்றும் சொத்துக்களை குவித்ததாகவும், இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் வெலே சுதா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெலே சுதா, அவரது மனைவி மற்றும் அவரது சகோதரி ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வெலே சுதா உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என அவர்களது சட்டத்தரணிகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பந்துல கருணாரட்னவிடம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
நிதிச் சலவை குற்றச்சாட்டின் அடிப்படையில் ஓராண்டு காலப்பகுதிக்குள்ளேயே வழக்குத் தொடரப்பட முடியும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிலையில், வெலே சுதா உள்ளிட்டவர்களுக்கு சட்ட மா அதிபர் இந்த சட்டத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்துள்ளார் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
வெலே சுதாவின் சார்பில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சமிந்திர பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த எதிர்ப்பு குறித்து எழுத்து மூலம் அறிவிக்குமாறு நீதவான் அறிவித்துள்ளார்.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் கொழும்பை அண்டிய பகுதிகளில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்து பணம் சம்பாதித்தல் உள்ளிட்ட 57 குற்றச்சாட்டுக்களை சுமத்தி சட்ட மா அதிபர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
வெலே சுதா உள்ளிட்டவர்கள் தொடர்பிலான வழக்கின் எழுத்து மூல எதிர்ப்புக்களை எதிர்வரும் ஜூலை மாதம் 26ம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.