கறுப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமன் குமாரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கறுப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, இவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கிலிருந்தே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இவரை 5,000 ரூபாய் காசுப் பிணையிலும் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணையிலும் செல்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் நிதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டார். கடந்த 2008ஆம் ஆண்டு, கல்கிசை பகுதியில் வைத்து 7.05 கிராம் ஹெரோய்னை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெலே சுதாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.