எமது நாட்டிலிருந்து மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுச் சென்றுள்ளவர்களின் வாக்குரிமையை புதிய அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டுமென வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கான ஐக்கிய உறுப்பினர்கள் அமைப்பு வலிறுத்தியுள்ளது.
அத்துடன் அவர்ளின் வாக்குரிமையையும் தொழில் உரிமைகளையும் வலியுறுத்தி எதிர்வரும் 22ஆம் திகதி சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கிய பாரிய பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ள அவ்வமைப்பு பேரணியின் இறுதி தினமான 27ஆம் திகதி ஜனாதிபதியிடம் தமது கோரிக்கைகளடங்கிய மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கான ஐக்கிய உறுப்பினர்கள் அமைப்பின் ஊடகவியலாளர்கள் மாநாடு இன்றைய தினம் கொழும்பிலுள்ள சமுக சமய நிலையத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் அவ்வமைப்பின் தலைவர் சுஜித் பெரேரா, உறுப்பினர்களான துஷார குரேரா, வின்சன் குணரட்ன மற்றும் ஊடகப்பேச்சாளர் தர்சன ஹந்துல்கொட ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இம்மாநாட்டில் அவ்வமைப்பின் தலைவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நாட்டிலிருந்து பலர் உலகின் பலபாகத்திற்கும் தொழில் நிமித்தம் சென்றிருக்கின்றார்கள். குறிப்பாக மத்தியகிழக்கில் மட்டும் சொல்லெண்ணாத் துன்பங்களுக்கு மத்தியில் 3 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றார்கள். மத்திய கிழக்கு உட்பட மேலைத்தேய நாடுகளில் சுமார் 45இலட்சம் வாக்காளர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் தற்போதும் இலங்கை பிரஜைகளாகவே காணப்டுகின்றார்கள். இருப்பினும் அவர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புக்கள் வழக்கப்படாது ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றார்கள். இவர்களுக்கான வாக்குரிமை அளிக்கப்படவேண்டுமென நாம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் வலியுறுத்தியிருந்தோம். இருப்பினும் தற்போதுவரையில் அதற்கான எந்தவொரு முனைப்புக்களும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாம் கோருகின்றோம். எமது அமைப்பு எந்வொரு அரசியல் நோக்கத்திற்காகவும் அல்லது அரசியல் கட்சிகளின் ஆதரவுக்காகவும் இவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை. எமது நாட்டின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் எம்மவர்களின் உரிமைகள் ஒருபோதும் மறுக்கப்படக்கூடாது என்பதற்காகவே இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளோம். இதனை அரசாங்கத்திடம் வலியுத்தும் வகையில் எதிர்வரும் 22ஆம் திகதி சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரதநிலையம் நோக்கி பாரிய பேரணியொன்றை நடத்தவுள்ளோம். பேரணியின் இறுதி தினமான 27ஆம் திகதி வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களின் உரிமைகள், வாக்குரிமைகள் என்பவற்றை வலியுறுத்தும் வகையிலான மகஜரொன்றை கையளிக்கவுள்ளோம் என்றார்.
துஷார குரேரா
2007ஆம் ஆண்டிலிருந்து நாம் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களின் வாக்குரிமையினை உறுதிப்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபக்ஷவிடமும் ஏனைய அரசியல் தரப்புக்களிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றோம். எமது நாட்டின் பெருளாதரத்தில் 7.5வீத வருமனாத்தினை வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களே ஈட்டித்தருக்கின்றார்கள். வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பைப் பெற்றுச் சென்றாலும் அங்கு இலகுவானதொரு வாழ்க்கையை வாழ்வதென்பது மிகமிக கடினமானது. அவ்வாறான நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வரும் அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகளாகவே காணப்படுகின்றார்கள். ஆகவே அவர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்தப்படவேண்டியது மிகவும் அவசியமானதொன்றாகும்.
இலங்கையை விட வளச்சியில் குன்றிய ஏனைய நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்பவர்கள் தமது வாக்குரிமையை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாட்டிலிருந்து தொழில் வாய்ப்பை பெற்று வெளிநாடுகளில் உள்ளவர்கள் தேர்தல் காலத்தில் அந்ததந்த நாடுகளில் அமைந்துள்ள தூதரங்களின் ஊடாக தமது ஜனநாயக கடமையை உரியவகையில் புரிகின்றனர். அவ்வாறான நிலையில் இன்றுவரையில் இலங்கையில் அத்தகைய ஒரு நிலைமை ஏற்படுத்தப்படாமை வருத்தமளிக்கின்றது.
ஆகவே தற்போது தேர்தல் முறைமையில் திருத்தங்களை முன்னெடுத்து அரசியல் அமைப்பில் 20ஆவது திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அத்திருத்தச் சட்டமூலத்தின் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்தும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடமும் சம்பந்தப்பட்ட தரப்பிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம். அதேநேரம் புதிய அரசாங்கதிடமும் இவ்விடயத்தை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளோம் என்றார்.