– எம்.வை.அமீர் –
இனி நமக்காக நாமே பேசுவோம். வெளிநாடுகளில் பணி புரியும் அப்பாவி இலங்கை ஏழைத் தொழிலாளர்களின் நலன்களைப் பற்றி சிந்தித்தவர் எவருமில்லை. மத்திய கிழக்கில் மாத்திரம் சுமார் ஏறத்தாள 15 லட்சம் இலங்கை தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
மாறி மாறி எத்தனை ஆட்சிகள் தோன்றினாலும் எந்தவொரு அரசாங்கமும் எமது விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்ததுமில்லை . எனவே நாம் வாக்களிக்கும் வசதியைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே , அரசாங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ, இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குகளை மையமாகக்கொண்டு, தேர்தல் வாக்குறுதிகளின் மூலமாவது காலப் போக்கில் இந்த ஏழை தொழிலாளர்களின் அபிலாசைகளை, ஒவ்வொன்றாக தீர்த்து வைக்க அது ஏதுவாக அமையும். இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு இக்கோரிக்கையை வலுப்பெறச் செய்ய நாம் அனைவரும் ஓரணியில் இணைந்திடுவோம்.
மேலும் சமூக வலைத்தளங்களிலும் பின்னூட்டல்கலிலும் இந்த கருத்துக்களை பிரதிபலிப்போம் . எமது பிரச்சினைகளை ஒரு தேசிய பேசு பொருளாக மாற்றாதவரை எம்மால் எந்தவொரு அபிலாசைகளையும் வென்றெடுக்க முடியாது. மேலும் நல்லாட்சி என்கின்ற எண்ணக்கருவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் ஒன்றிணைந்து கிடைக்கும் சந்தர்ப்பம் இதைவிட்டால் இனிமேலும் கிடைக்குமா இல்லையா என்பதும் சந்தேகம்தான்.
ஆகவே புலம்பெயர் தொழிலாளர் சகோதரர்களே, மற்றும் அவர்களது உறவுகளே !. இன்று காலம் கனிந்திருக்கிறது , தேசிய அரசாங்கம் எனும் இந்த இரண்டு வருடங்களுக்குள் எமது வாக்களிக்கும் வசதியை பெற்றுக்கொள்ள குரல் கொடுப்போம் . அதனை மூலதனமாக கொண்டு எமது அபிலாசைகளை வென்றெடுக்கலாம் விரையுங்கள்.