யுத்தக்குற்றச்சாட்டுகள் மற்றும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் அமைவான விசாரணை நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு வேண்டியதில்லை. இதற்கு ஒரு போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பங்களிப்பு வழங்காது. இவ்விடயம் தொடர்பில் எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் கிடையாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பிரதிநிதியும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இவ்வார இறுதியில் ஜக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கான விஜயத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில் தேசிய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுப்பட்டு வரும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பில் இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றினைந்து இது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன் போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
கடந்த காலங்களில் ஜெனிவாவில் எமது நாட்டின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவான செயற்பாடுகளை இரண்டு பிரதான கட்சிகளின் ஒருமித்த ஒத்துழைப்புகள் மூலம் தேசிய அரசாங்கத்தின் மூலமாகவே கையாள முடியும். அந்தவகையில் இவ்விடயத்தில் வெளிநாட்டு நீதிபகளின் தலையீடுகள் தொடர்பில் எமக்கான அன்றைய நிலைப்பாடே தற்போதும் காணப்படுகின்றது.
அந்தவகையில் தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தற்போதைய நல்லிணக்கம் மற்றும் யுத்தகுற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் உதவிகளை பெற்று கொள்வது தொடர்பிலான விடயத்துக்கு நாம் ஒரு போதும் இணங்க போவது இல்லை. அவ்வாறான எந்தவொரு விடயங்களும் இடம் பெறாது. என்பதனையும் நாம் உறுதியாக கூறிகொள்கின்றோம்.
கடந்தக்கால அரசாங்கத்தின் கீழ் எமது நாட்டுக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகளின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உட்பட அனைத்து வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் இந்த விடயத்தை நாம் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். இவ்வாறான நிலையில் இவ்வார இறுதியில் தற்போதைய ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கான விஜயத்தை முன்னெடுக்கவுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அந்தவகையில் தேசிய அரசாங்கத்தின் கீழ் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பில் இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து இது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம். எவ்வாறாயினும் யுத்தக்குற்ற விசாரனைகளை முன்னெடுக்கும் போது வெளிநாட்டு நீதிபதிகளை எவ்வாறான நிலையிலும் நாம் இணைத்து கொள்ளப்போவது இல்லை இவ்விடயத்தில் நாம் உறுதியாகவுள்ளோம்.
அன்மையில் வெளிநாட்டு சேவையொன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய சேவையில் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். எமது நாட்டில் நடைபெற்ற யுத்த நடவடிக்கையானது முற்றுமுழுவதுமாக பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட யுத்தமே ஆகும். சிவில் சமூகங்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எமது இராணுவத்தினரினால் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக எமது இராணுவ வீரர்கள் பல்வேறு உயிர் தியாகங்களை முன்னெடுத்தனர். என்பதனை மறந்து விடமுடியாது. மறுபுறம் யுத்தநடவடிக்கையின் போது ஒரு சிலர் தவறுகள் இழைத்திருக்கலாம். அதனை நாம் ஏற்றுகொள் கின்றோம். இதனை கொண்டு அனைத்து இராணுவ வீரர்களையும் குற்றம் சுமத்துவதானது அர்த்தமற்றது. இது தொடர்பில் விரிவான விசாரனைகளை முன்னெடுப்பதனை நாமும் வலியுருத்துகின்றோம் என்றார்.