Breaking
Mon. Dec 23rd, 2024

-நாச்சியாதீவு பர்வீன் –

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும். தற்போது இலங்கையில் சமாதானச்சூழல் நிலவுகின்றது. பல்வேறு தொழிற்துறைகளுக்கான கேள்வியும் சாதகமான காலநிலையும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சாதகமான சந்தர்ப்பத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற்றமடைவதோடு, வேலைவாய்ப்புப் பிரச்சினையும் கணிசமானளவு தீர்க்க முடியுமென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய வேலைவாய்ப்பு நெருக்கடி பற்றி கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கடந்த 30 வருட கால யுத்தத்தின் பின்னர் சமாதானம் நிலவுகின்ற அழகிய பூமியாக இலங்கை மாறியுள்ளது. இப்போது சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கைக்கு இலாபகரமான வருமானம் கிடைக்கின்றது.

அதற்கான மூல காரணம் தெற்காசியாவில் மிகவும் சிறந்த இடத்திலே அழகான பூமியாக இலங்கை அமைந்திருப்பதாகும். சுற்றுலாத்துறையைப் போன்றே ஏனைய உற்பத்தித்துறைகளிலும் இலங்கை தன்னிறைவை அடைய வேண்டுமென்பதே இந்த அரசின் மிக முக்கியமான நோக்காகும். அந்த வகையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கையில் பல்வேறுபட்ட தொழிற்துறைகளில் முதலீடு செய்யத் தூண்டுகின்ற செயற்பாடுகளை இந்த அரசு மேற்கொள்கின்றது. எதிர்காலத்தில் இது சாத்தியப்படுமிடத்து, பாரிய தொழிற்சாலைகளை இலங்கையில் நிறுவுவதன் மூலம் அதிகூடிய வேலைவாய்ப்பினை நம்மவர்களுக்கு வழங்க முடியும்.

படித்த இளைஞர்கள் அனைவரும் அரசாங்க வேலையைத்தேடியே ஓடுகின்றனர். அரசே தமக்கான தொழில்வாய்ப்பைத் தர வேண்டும் என்று வரிசையில் நிற்கின்றனர். அரசு துறைகளில் போதிய வெற்றிடங்கள் இல்லாதவிடத்து, இவர்களுக்கான வேலைவாய்ப்பை தனியார் துறைகளில் தேடிக்கொள்வதே மிகச்சிறந்த நடவடிக்கையாக அமையும். அரச துறையிலும் பார்க்க இன்று தனியார்துறைகளில் கவர்ச்சிகரமான சம்பளமும் தொழிலாளர் மேம்பாட்டு நலத்திட்டங்களும் அதிகமதிகம் காணப்படுகின்றன. எனவே, இளைஞர்கள், யுவதிகள் தமது திறமைகளை தனியார்துறைகளிலும் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.

அதன் போது தான் நமது நாடு துரிதமான அபிவிருத்தியையடையும். நமது நாட்டிலிருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை வேலையில்லாப் பிரச்சினையாகும். இந்தப்பிரச்சினைக்கு அரசினால் உடனடியான தீர்வினை வழங்க முடியாதென்பது வெளிப்படையான உண்மையாகும். அந்த வகையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையும் புது வகையான தொழிற்சாலைகளின் அமைவும் இலங்கையை புதிய மாற்றங்களுடான அபிவிருத்திப்பாதைக்கு இட்டுச்செல்லும் என நம்பலாம். எதிர்காலத்தில் சுபீட்சமுடைய உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட ஒரு நாடாக இலங்கையை நாம் கனவு காண வேண்டும்.

எல்லாத்துறைகளிலும் இளைஞர்களும் யுவதிகளும் தமது திறமைகளைப் பயன்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு தன்னாலான சேவைகளைச் செய்ய வேண்டும். அரசதுறை தொழில்வாய்ப்புகளை மாத்திரம் கருத்திற்கொள்ளாமல், தனியார் துறைகளிலும் தொழில் வாய்ப்புகளைப்பெற்று இயங்குவதன் மூலம் வேலையில்லாப்பிரச்சினை தீர்வதோடு தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றத்தையும் எதிர்காலத்தில் அடைய முடியும் என அவர் கூறினார்.

By

Related Post