தற்போது பெய்துவரும் மழையினையடுத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையில், உயர்மட்டக் குழுவினர் அங்கு விசேட உலங்கு வானூர்த்தியில் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்தக் குழுவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனும் இணைந்து கொண்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையினையடுத்து வடக்கில் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானதையடுத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி பாதுகாப்பு தரப்புக்கு வழங்கிய பணிப்புரைக்கமைய மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு உள்ளிட்ட உலர் உணவுகளை தங்கு தடையின்றி வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அரசாங்கத அதிபர்களை கேட்டுள்ளார்.
இதற்கமைய சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவவதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தலைவர் தயானந்தன் தெரிவித்திருந்தார்.
தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்து, தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு கொழும்பிலிருந்து விசேட விமானம் மூலம் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையில், குழுவினர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கு விஜயம் செய்துள்ளனர்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அனர்த்த நிவாரணம் தொடர்பான கூட்டத்தில், துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களாக இயங்கும் பாடசாலைகள் சிலவற்றிற்கும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்ததாக, அமைச்சருடன் பயணித்துள்ள வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.