Breaking
Sat. Nov 23rd, 2024

வெள்ளவத்தை – ஹெவ்லொக் தொடர்மாடி குடியிருப்பில் இருந்து நான்கு வயதான பாத்திமா சப்னா என்ற 4 வயதான குழந்தை தவறிவிழுந்து உயிரிழந்தமை தொடர்பிலான மரண விசாரணை இடம்பெற்றுள்ளது.

உயரமான கட்டிடத்திலிருந்து வீழ்ந்தமை காரணமாக குழந்தையின் உடலில் உட்பகுதியில் காயங்கள் ஏற்பட்டதாக உயிரிழப்பு ஏற்பட்டதாக மரண விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

வத்தளை மாபோல பிரதேசத்திலிருந்து 3 பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தையில் உள்ள தமது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடியிருப்பின் 11 வது மாடியில் உள்ள உறவினரின் வீட்டில் இருந்து 2 வது மாடியில் உள்ள சிறுவர் பூங்காவுக்கு தாயாரும், 3 பிள்ளைகளும் சென்றுள்ளனர்.

பின்னர் குடிநீர் அருந்துவதற்காக மூத்த சகோதரியுடன், உயிரிழந்த குழந்தை மின்தூக்கியில் 11 வது மாடிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் 22 ஆம் மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளதாக நம்பப்படுகின்றது.

இந் நிலையில் சம்பவத்தின் போது என்ன நடந்தது என்பது தொடர்பில் இன்னும் மர்மமாகவே உள்ளது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உயிரிழந்த குழந்தையின் மூத்த சகோதரி:

” தங்கை குடிநீர் குடிக்க வேண்டும் என அழுதார் எனவே நான் அவருக்கு தண்ணீரை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு கூட்டிக்கொண்டு மின் தூக்கியில் மேலே சென்றேன். குறித்த மாடிக்கு சென்றதுடன் நான் மின் தூக்கியிலிருந்து வெளியேறியதுடன் அவரை மின் தூக்கியின் கதவைத் தானாக திறந்து வைத்திருக்கும் பொத்தானை அழுத்திக் கொண்டு இருக்கும் படி கேட்டுக்கொண்டேன், ஆனால் அவர் பொத்தானிலிருந்து கையை எடுத்து விட்டார். இதனையடுத்து மின் தூக்கி மேலே சென்று விட்டது. அவர் அங்கிருந்து கீழே பாய்ந்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள குறித்த தொடர்மாடி குடியிருப்பின் பாதுகாப்பு ஊழியரொருவர்:

” நான் பிரதான வாயிலேயே கடமையில் இருந்தேன், எனக்கு அழைப்பொன்று வந்தது குழந்தையொன்று காணாமல் போயுள்ளது அவரைத் தேடும்படி எமக்கு தெரிவிக்கப்பட்டது. நாம் மேலே இருந்து தேடிக்கொண்டு வரும் பொழுது கீழே இருந்து குழந்தையொன்று விழுந்து கிடப்பதாக சத்தம் கேட்டது. இதனையடுத்து வந்து பார்க்கும் போது குழந்தை விழுந்து கிடந்தது முகத்தில் காயமும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் தொடர்மாடி குடியிருப்பில் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படாமையே விபத்துக்கான காரணம் எனவும் அதிகாரிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டுமெனவும் குழந்தையின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இச் சம்பவத்தின் என்ன நடந்தது என்பதனை தெரிந்துகொள்ள சி.சி.டிவி காணொளியை பரிசீலிக்க கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அவற்றில் இச் சம்பவம் பதிவாகியிருக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது , இதனையடுத்து ஆத்திரமடைந்த குழந்தையின் உறவினர்கள் தொடர்மாடி குடியிருப்பின் பாதுகாப்பு அதிகாரியிடம் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயம் காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளமை மரண விசாரணைகளில் இருந்து தெளிவாகின்ற போதிலும் சம்பவம் நிகழ்ந்த விதம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

Related Post