ஜனவரி 8 ஆம் திகதி ஜனநாயக புரட்சியை பின்நகர்த்தி மீளவும் வெள்ளை வேன் கலாசாரத்தை ஏற்படுத்துவதா? அல்லது ஆகஸ்ட் 17 ஆம் திகதி அனைவரும் ஒன்றிணைந்து புதிய புரட்சியை ஏற்படுத்தி அபிவிருத்தியுடனும் சிறந்த பொருளாதாரத்துடனும் கூடிய புதிய இலங்கையை உருவாக்குவதா என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து நல்லாட்சியை மேலோங்க செய்து ஒழுக்க பண்புகளுடன் கூடிய நாட்டை உருவாக்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாக்குறுதிகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட சிந்தனைகள் அன்றி 60 மாதங்களில் புதிய இலங்கையை உருவாக்கும் ஐந்து அம்ச திட்டத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் இந்த திட்டத்தை வெற்றிப்பெற செய்யவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாத்தளை தம்புளை நகரில் நேற்று முன் தினம் நடைப்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் பிரதமர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாட்டு மக்கள் ஒருபோதும் எதிர்பார்த்திராத வகையில், தோற்கடிக்க முடியாது என்று கூறப்பட்ட சர்வதிகார போக்குடன் கூடிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியினை தோற்கடித்தோம். எனினும் ஜனவரி 8 ஆம் திகதி மக்களினால் ஏற்படுத்தப்பட்ட புரட்சியை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான தற்போது சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது.
சிறுப்பான்மை அரசாங்கம் என்ற 100 நாட்களில் மக்களுக்கு அழித்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றிக் காட்டியுள்ளோம். முன்னைய ஆட்சியாளர்களினால் நிறைவேற்ற முடியாது என்று கூறிய பல்வேறு விடயங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். அத்தியாவசிய பொருடகளின் விலைகளையும் குறைத்துள்ளோம். பெற்றோல்,டீசல் விலைகளையும் குறைத்தோம். அரச ஊழியர்களில் சம்பளத்தை அதிகரித்தோம். இதனை முன்னைய ஆட்சியாளர்களினல் நிறைவேற்ற முடியாமல் போனது. ஆனால் பாராளுமன்ற சிறுப்பான்மை அரசாங்கம் என்ற வகையில் நிறைவேற்றிக் காட்டினோம்.
100 நாள் வேலைத்திட்டத்தினூடாக பாரிய திட்டங்களை சாதித்தோம். ஆகவே 100 நாட்களில் பாரிய வேலைத்திட்டங்களை சாதிக்க முடியும் என்றால் ,ஐந்தாண்டு காலத்திற்கு ஆட்சி பொறுப்பு எமக்கு கிடைக்கப் பெற்றால் எம்மால் எதனை செய்ய இயலாது. பத்து வருடமாக இந்த நாட்டை சீரழித்தது போதாதென்று மீளவும் பிரதமராகுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அவதாரம் எடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மாத்திரமின்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் இரண்டாக பிளவுப்படுத்தியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாகும். தற்போது சுந்திரக் கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சியினால் எவ்வாறு ஆட்சி அமைக்க முடியும். இத்தகைய நிலையில் மஹிந்த ராஜபக்ஷவினால் எவ்வாறு பிரதமராக முடியும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகும் திட்டம் கனவிலும் நடக்காது. அவரை பிரதமராக்க மாட்டேன் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்பட கூறியுள்ளார். இந்த நிலைமையில் முன்னாள் ஜனாதிபதியினால் எவ்வாறு பிரதமராக முடியும்.
இந்நிலையில் நான் ஆட்சியை கைப்பற்றி நாட்டிற்கு துரோகம் இழைக்கப்போவதாக கூறுகின்றனர். ரணில் சுமார் 15 வருடமாக நாட்டை ஆட்சி செய்யப்போவதாக எதிர்க்கட்சிகள் பரவலாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
15 வருடமாக நாட்டை ஆட்சி செய்வதற்கு நான் ஒன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்ல. அவரை போன்று அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை. எனக்கு 15 வருடமாக நாட்டை ஆளும் அளவிற்கு அதிகார மோகம் என்னிடம் இல்லை.
நாட்டிற்கு என்னால் ஆற்ற வேண்டிய சேவைகளை நிறைவேற்றிய பின்னர் நானே அரசியலிருந்து ஒதுங்கி விடுவேன் . ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவேண்டிய ஆசை எனக்கு ஒருபோதும் வந்தது கிடையாது. ஐந்தாண்டு கால நிறைவில் புதிய இலங்கை நான் உருவாக்குவேன். இதற்கான மக்கள் எனக்கு ஆணை வழங்கவேண்டும். இதுவரை காலம் இலங்கைக்கு கிடைக்கபெறாத அளவிற்கு சர்வதேச முதலீடுகளை கிடைக்க வழிச்செய்வேன்.
ஐந்தாண்டு நிறைவில் இலங்கையை ஆடை உற்பத்திக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் கார் உள்ளிட்ட வாகனங்களையும் உற்பத்தி செய்வோம். ஐந்து அம்ச வேலைத்திட்டங்களுடன் நாட்டை அபிவிருத்தி செய்வோம்.
ஜனவரி 8 ஆம் திகதி ஜனநாயக புரட்சியை பின்நகர்த்தி மீளவும் வௌ்ளை வேன் கலாசாரத்தை மீளவும் ஏற்படுத்துவதா அல்லது ஆகஸ்ட 17 ஆம் திகதி அனைவரும் ஒன்றிணைந்து புதிய புரட்சியை ஏற்படுத்தி அபிவிருத்தியுடனும் சிறந்த பொருளாதாரத்துடன் கூடிய புதிய இலங்கையை உருவாக்குவதா என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும
வாக்குறுதிகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட சிந்தனைகள் அன்றி 60 மாதங்களில் புதிய இலங்கையை உருவாக்கும் ஐந்து அம்ச திட்டத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் இந்த திட்டத்தை வெற்றிப்பெற செய்யவேண்டும்.
ஜனவரி 8 ஆம் திகதி கிடைக்க பெற்ற மக்கள் ஆணையை கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்தியதனை போன்று அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை அபிவிருத்தி செய்யும் நாம் நிறைவேற்றுவோம் . இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை நாம் ஏற்படுத்துவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.