Breaking
Mon. Dec 23rd, 2024

துமிந்த சில்வா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது நான் அவரின் கீழ் பணியாற்றினேன். அச்சந்தர்ப்பத்தில், தேர்தல் பிரசாரத்துக்காக என்னிடம் 20 இலட்சம் ரூபாவை கேட்டார். அந்த பணத்தை கொடுத்தேன்.

நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதன் பின்னர் என்னுடைய வீட்டுக்கு வெள்ளைவேனும் பொலிஸமே எந்தநேரமும் வந்தது என்று வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்த குமார, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாக்குமூலமளித்தார்.

சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்த குமார என்பவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் டிரயல்-அட்பார் முறையில் நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதி பிரித்தி பத்மன் சுரசேன முன்னிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, அரசாங்க சட்டத்தரணி குறுக்கு விசாரணை செய்தபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். அவ்வழக்கை மூன்று நாட்களுக்குள் நிறைவுக்கு கொண்டுவருவதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி பிரித்தி பத்மன் சுரசேன, செவ்வாய்க்கிழமை தீர்மானித்திருந்தார். பிரபல போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா, பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

அத்துடன், வெலே சுதாவின் மனைவி மற்றும் உறவுக்கார சகோதரி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக போதைப் பொருள் விற்பனையில் பெற்ற பணத்தை முதலீடு செய்தமை உள்ளிட்ட 58 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு அவ்வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த அரசாங்கத்தில் இருந்த சில அரசியல்வாதிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்கள் வெலே சுதாவுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 7.05 கிராம் ஹெரோய்னை தம்வசம் வைத்திருந்த குற்றஞ்சாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு, கல்கிஸையில் வைத்து வெலே சுதா கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

-TM-

Related Post