Breaking
Thu. Nov 14th, 2024

-சுஐப் எம்.காசிம்-

இலங்கை மக்கள் காலத்திற்குக் காலம் பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான உயிர்களையும், பல்லாயிரக்கணக்கான சொத்துக்களையும் இழந்துள்ளனர்.

அந்த வகையில் கடந்த 18 ஆம் திகதி மலையகத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளும், ஏனைய இடங்களில் மோசமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் மக்களின் வாழ்க்கையில் அழிய முடியாத தடங்களாக பதிந்து விட்டன. ”மழை வந்தால் வெள்ளம் வரும். மழை நின்று போனால் வெள்ளம் வடிந்து விடும். இயல்பு வாழ்க்கை மீண்டும் தொடங்க முடியும்” என்று நம்பியிருந்த மக்களுக்கு பேரிடி ஒன்று காத்திருந்தது. நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளம் எல்லோரையும் மோசமாகப் பாதித்தது.

எனினும் கொழும்பிலும், மல்வானையிலும் ஏற்பட்ட பெருவெள்ளமும் களனி கங்கையின் பெருக்கெடுப்பும் இந்த மக்களை கடந்த 19 ஆம் திகதி உடுத்த உடையுடன் தலை தெறிக்க ஓட வைத்தது. எங்கே போவோம் என்று தெரியாத மக்கள் கண்ணுக்கெட்டிய இடங்களில் தஞ்சமைடைந்தனர்.

கொழும்பின் கொலன்னாவ – வெல்லம்பிட்டிய பிரதேசம், கொதட்டுவ பிரதேசம் ஆகியவற்றில் மேல் மாடியில் வாழ்ந்த மக்கள் வெள்ளம் வடிந்து விடும் என்ற நம்பிக்கையிலும் அசட்டுத்துணிவிலும் அங்கேயே இருந்தனர்.

19ஆம் திகதி கொழும்பு, மல்வானை அல்லோல கல்லோலப்பட்டது. பரோபகாரிகளும், வள்ளல்களும், சமூக நல இயக்கங்களும், அரசியல் தலைவர்களும் உதவிக்கரம் நீட்டி பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விரைந்தனர்.

துருக்கியில் நடைபெறவிருந்த சர்வதேச தானிய, பருப்பு வகைகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமைச்சர் றிசாத், வெள்ளம் வந்த அதே தினமான 19 ஆம் திகதி காலை சரியாக 11.30 மணிக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட ஏற்பாடாகி இருந்தது. பயண ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில் எதுவுமே செய்ய வழியில்லாது மக்கள் படும் துன்பங்களை அறிந்து, அன்று காலை வெல்லம்பிட்டி பிரதேசத்திற்கு விரைந்தார் அமைச்சர் றிசாத்.

தனது சகோதரரும், மாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன், கட்சியின் முக்கியஸ்தர்களான செயலாளர் சுபைர்தீன், மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், ஹுஸைன் பைலா, முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், ரியாஸ் சாலி, சட்டத்தரணி மில்ஹான், மௌலவி முபாரக் அப்துல் ரஷாதி ஆகியோர்களை அவசரமாக வரவழைத்து, மக்களுக்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டுமோ அத்தனை பணிகளையும் குறைவின்றி செய்யுமாறு பணித்தார்.

தனது கட்சியின் தவிசாளரும், பிரதியமைச்சருமான அமீர் அலியை தொடர்புகொண்டு மக்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.

அவசரமாக நான்கு படகுகளை மக்களை வெளியேற்றுவதற்காக ஏற்பாடு செய்த அமைச்சர், கடற்படை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மேலும் படகுகளை அனுப்பி வைப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி விமான நிலையத்திற்குச் சென்றார்.

அகதி வாழ்வு என்பது மிகவும் கொடியது என்பதை, அவர் தனது வாழ்க்கையில் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் அனுபவித்தவர். மன்னாரிலிருந்து படகிலேறி தனது குடும்ப உறுப்பினர்கள், ஊரவர்களுடன் கொட்டும் மழையில் நனைந்துகொண்டு கற்பிட்டிக்கு வந்தவர்தான் அவர். அப்போது அவர் ஒரு பாடசாலை மாணவன். கொத்தாந்தீவு அகதி முகாமில் அவர் பட்ட கஷ்டங்களும், அவர் சார்ந்த சமூகம் பட்ட கஷ்டங்களும், வேதனைகளுமே பின்னர் அவரை எம்.பியாக்கி, அமைச்சராக்கி, அரசியல் கட்சியின் தலைவராக்கி, ஒரு சமூகத்தலைவனாக உயர்ந்து நிற்கும் அளவுக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில் வெள்ள அகதிகள் படும் கஷ்டங்களை சுமந்து கொண்டு துருக்கி சென்ற அவர், அந்த மாநாட்டில் மட்டும் பங்கேற்று விட்டு அதன் பின்னர், கஸகஸ்தான் அஸ்டானா மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “கஸகஸ்தான் பொருளாதார மாநாட்டையும், ரஷ்யா மொஸ்கோவில் நடைபெற இருந்த இலங்கை இரத்தினக்கற்கள், ஆபரண மாநாட்டையும் இரத்து செய்து விட்டு கடந்த 22 ஆம் திகதி மீண்டும் கட்டுநாயக்க வந்து சேர்ந்தார்.

துருக்கியிலிருந்த போது கட்சியின் முக்கியஸ்தர்களுடன் தொடர்பு கொண்டு நிலவரங்களை கேட்டறிந்து கொண்டதோடு மட்டும் நின்று விடாது உருப்படியாக ஏதாவது மக்களுக்கு செய்யுமாறு வேண்டினார்.

22ஆம் திகதி இலங்கை வந்து சேர்ந்த அவர், அன்று மாலை 5 மணி அளவில் வெல்லம்பிட்டி சந்திக்கு வந்து சேர்ந்தார். கடல் போல் காட்சியளித்த வெல்லம்பிட்டி – அவிசாவளை பாதையில் கடற்படை உதவியுடன் படகொன்றை வரவழைத்து அமைச்சரும், அவரின் சில முக்கியஸ்தர்களும் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றனர்.

வெளியேற முடியாது மேல்மாடியிலிருந்த மக்களின் தேவைகளை கேட்டறிந்த அமைச்சர், பின்னர் கொழும்பின் பல அகதி முகாம்களுக்கும் சென்றார்.
கொலன்னாவை ஜும்மா பள்ளிக்கு சென்ற அவர், கொலன்னாவை பள்ளி சம்மேளனத்தின் நிவாரணப்பணிகளை அறிந்து கொண்டதுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார்.

அதன் பின்னர் மாளிகாவத்தையிலுள்ள ஜம்மியதுல் உலமா தலைமைக் காரியாலயத்திற்கு சென்று உலமாக்களை சந்தித்தார். சமூகப் பணிகளிலும் நிவாரணப் பணிகளிலும் அர்ப்பணிப்பு செய்து கொண்டிருந்த உலமாக்களையும், அவர்களது உதவியாளர்களையும், ஜம்மியதுல் உலமாவின் தலைமையில் உருவாக்கப்பட்டிருந்த நிவாரண இணைப்பு நிலையத்தினது அங்கத்தவர்களையும் சந்தித்து பல்வேறு விடயங்களை கேட்டறிந்துகொண்டு, அவர்களுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

உலமா சமூகம் மிகவும் காத்திரமான பணியை கையெடுத்துள்ள போதும் அதனை மேலும் வலுவூட்டுவதற்கு கொழும்பு வாழ் அரசியல் முக்கியஸ்தர்களின் உதவிகளையும், பங்களிப்புக்களையும் பெற்றால் இன்னும் சிறப்பானதாக இந்தப்பணி மாறும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை கொலன்னாவை பிரதேச செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டத்தில் அமைச்சர் றிசாத்தும் கலந்து கொண்டார். ஆக்க பூர்வமான கருத்துக்களை முன்வைத்து, மக்கள் படும் துன்பங்களை அதிகாரிகளுக்கு உணர்த்திவிட்டு வெளியேறிய அமைச்சர், கொலன்னாவை விகார லேனில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் மரிக்காரின் அலுவலகத்திற்குச் சென்று நிவாரணப் பணிகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடிவிட்டு, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு சென்று, அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பவை சந்தித்தார். இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், கலாநிதி அனீஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தபோது தனக்கு நேர்ந்த அனுபவங்களை யாப்பாவிடம் விளக்கிய அவர், மக்களின் கஷ்டங்களை குறைப்பதற்கான வழிவகைகள் குறித்தும், கடந்த காலத்தில் மீளகுடியேற்ற அனர்த்த நிவாரணப்பணிகளில் தான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் சில கருத்துக்களை முன்வைத்தார்.

அதன் பின்னர் அன்றிரவு மல்வானைக்கு சென்று ரக்ஷபான, உல்கிட்டிகல, மல்வான ஆகிய இடங்களிலிருந்து வெளியேறி, பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ள மக்களை சந்தித்து தேவைகளை கேட்டறிந்துகொண்டார்.
அடுத்த நாள் திங்கட்கிழமை காலை அகதி முகாம்களிலும், பாடசாலைகளிலும், பன்சலைகளிலும் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும், பாவனைக்குத் தேவையான பொருட்களையும் நேரில் சென்று கையளித்தார்.

அன்றிரவு மட்டக்குளி சென்று அங்கு தங்கியிருந்த மக்களுக்கு நிவாரணங்களையும், நிதியுதவிகளையும் வழங்கிவிட்டு நேராக மீண்டும் மல்வான சென்றார். அமைச்சரும், அவர் சார்ந்த குழுவினரும் மல்வானை ஆட்டா மாவத்தைக்கு சென்ற போது நேரம் இரவு 9.50 ஆகிவிட்டது. அந்த இடத்திலிருந்து 1 ½ கிலோமீற்றர் தூரத்தில் நான்கு பக்கமும் வெள்ளத்தால் சூழப்பட்ட, மழைகாலங்களின் போது தீவாக மாற்றமடையும் காந்திவளவ கிராமத்திற்கு செல்ல வேண்டும்.

சென்றே ஆகவேண்டும். ஏனென்றால் ஏற்கனவே கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் ஹாஜியார், அன்று மாலை எப்படியோ அந்த பிரதேசத்திற்கு சென்று, பின்னர் ஓர் ஒற்றையடிக் காட்டுப் பாதைக்கூடாக அந்த கிராமத்திற்குள் நுழைந்து, அமைச்சரின் வரவை அறிவித்துவிட்டார். அமைச்சர் வருவாரென்ற நம்பிக்கையில் இருந்த மக்களை றிசாத் ஏமாற்ற விரும்பவில்லை.

மழை தூறிக்கொண்டிருகின்றது, கும்மிருட்டான நேரம். மின்சாரம் வெள்ளம் வந்த நாளே துண்டிக்கப்பட்டுவிட்டது. அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் வசமிருந்த ஒரு சிறிய டோச் வெளிச்சமும், அங்கிருந்த சிலரின் மொபைல் வெளிச்சத்தையும் தவிர எதுவுமே இல்லை. ஆளை ஆள் தெரியாது. கரையிலிருந்தது ஒரு சிறிய படகு. அந்தப் படகில் அமைச்சர் போக எத்தனித்தார். பாதுகாப்பு அதிகாரிகள் இந்தப் பயணத்தை விரும்பவில்லை.

ஆட்டா மாவத்தையிலிருந்த மக்களும் போக வேண்டாம் சேர் என்றே கூறினர். வெள்ளம் ஆளுக்கு மேல் நிற்பதாகவும் இது ஓர் ஆபத்தான பயணமென்றும் அவர்கள் கூறினர்.

அமைச்சருடன் வந்திருந்தவர்களும் இந்தப் பயணத்தை கைவிடுங்கள் என்று எடுத்து சொன்ன போதும், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அல்லாஹ் இருக்கின்றான் என்று கூறியவாறே படகில் ஏறிக்கொண்டார்.

அமைச்சருடன் வந்திருந்த இன்னும் சிலர் ஒரு சிறிய தோணியில் தொற்றிக்கொண்டனர். இருட்டு வேளையிலே ஒரு திகில் பயணமாக அது இருந்தது. இடையில் போகும் போது தான் தெரியவந்தது அமைச்சர் ஏறிய படகு ஓர் உடைந்த படகென்று. எனினும் இறைவனின் உதவியால், மிகுந்த கஷ்டங்களின் மத்தியில், மழையில் நனைந்தவாறு, காந்திவளவ சென்றார். மக்களை சந்தித்தார். தேவைகளைக் கேட்டறிந்தார். நிதியுதவியும் வழங்கினார். கிராம சேவகர் கூட இன்று வரை வராத அந்த மக்கள் அமைச்சரைக் கண்டதும், மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.

அவர்கள் கொடுத்த சூடான பால் தேனீரை அருந்திவிட்டு மீண்டும் அதே படகிலேறிய அமைச்சர், ஆட்டா மாவத்தை வந்து அங்குள்ள அகதிகளையும் சந்தித்து நிதியுதவி வழங்கிய பின்னர், மீண்டும் பெருமழையின் மத்தியிலே ரக்ஷபான பள்ளிவாசலுக்கு சென்று, அங்கு குழுமியிருந்த மக்களை சந்திக்கின்றார்.

அந்த பள்ளிக்கு பிரதியமைச்சர் துலிப் விஜய சேகரவும் அப்போது வந்து சேர்ந்திருந்தார். பள்ளி நிர்வாகத்திடம் நிதியுதவியை வழங்கிவிட்டு, பின்னர் மல்வானையில் அமைந்திருந்த அகதியா கலா நிலையத்திற்கு சென்ற அமைச்சர், அங்குள்ள முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடிவிட்டு, மல்வானை கல்வி முன்னேற்ற சங்கத்திற்கு சென்றார். அங்கு அகதிப் பிள்ளைகளின் படிப்பிற்கான ஆயத்த நடவடிக்கைகளை கண்டு, அவர்களுக்கும் நிதியுதவி வழங்கினார்.
மல்வானையிலிருந்து அமைச்சர் வெளியேறும் போது அதிகாலை 1 மணியை கடந்திருந்தது.

கொழும்பு திரும்பிய அமைச்சர் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு, நேரே கொட்டிகாவத்த விமலாராம பன்சலை, நாகருக்காராமய விகாரை ஆகியவற்றுக்கு சென்று அங்கிருந்த அகதிகளுக்கு நிவாரணப் பொருட்கள், சாப்பாட்டுப் பார்சல்கள், பாவனைப்பொருட்களை வழங்கி வைத்தார். பின்னர் புத்கமுவ, மெல்வத்த ஆகிய இடங்களுக்கும் சென்று அகதிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகின்ற போதும், மக்களின் மனங்களில் மாறாத வடுவாக படிந்துள்ள துன்பங்களை அவர்கள் எவ்வாறு துடைக்கப்போகின்றார்கள் என்ற சிந்தனையில் இருக்கின்ற அமைச்சர் றிசாத் பதியுதீன், இந்த மக்களுக்கு இயல்பு வாழ்வை ஏற்படுத்துவது தொடர்பில் அரசின் உயர்மட்டத்துடனும் பல்வேறு சந்திப்புக்களை நடத்தி வருகின்றார்.

26 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1990 ஒக்டோபரில் துரத்தப்பட்ட வடபுல முஸ்லிம்கள், இன்னும் தமது தாயகத்திற்கு திரும்பி, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை தொடங்க முடியாது அகதி முகாம்களிலே கஷ்டப்படுவதைப்போன்று இல்லாமல், வெள்ளத்தினால் பாதிப்புற்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் அகதிகள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்பதே அமைச்சர் றிசாத்தின் பிரார்த்தனையாகவும், செயற்பாடாகவும் இருக்கின்றது. இறைவன் அவரது எண்ணங்களை நிறைவேற்றி வைக்க வேண்டுமென நாமும் பிரார்த்திக்கின்றோம்.

By

Related Post