Breaking
Mon. Dec 23rd, 2024
– அபூ பயாஸ் –

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது கட்சி பாகுபாடுகளை மறந்து ஒன்றிணைந்த முஸ்லிம் முன்னணியொன்றை அமைக்கவேண்டியது இன்றைய காலத்தின் தேவையென  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்எஸ் சுபைர் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் கொலைப்பட்டியலிலிருந்து விடுவித்து ஜனாதிபதியாக நாமம் சூடுவதற்கு முஸ்லிம்கள் பெரும் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். ஆனபோதிலும், தற்போது முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஜனாதிபதிகூட தட்டிக்கேட்பதில்லை என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர்-தாமரைக்கேணி ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தரா தர சாதாரண தர பரீட்சையில் முதல் தடவையாக சித்தியெய்திய பதினொரு மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
பாடசாலை அதிபர் ரீஎம் மன்சூர் தலைமையில் பாடசாலை முன்றலில் நேற்று நடைபெற்ற (10.06.2015) இந்நிகழ்வில், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. சேகு அலி உள்ளிட்ட கல்வியதிகாரிகள், பிரதேச செயலாளர் எஸ்.எல்எம் ஹனிபா மற்றும் சர்வோதய அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.ஏ கரீம் ஆகியோரும் கலந்துகொண்டனர். இங்கு மாகாண சபை உறுப்பினர் எம்எஸ் சுபைர் மேலும் பேசுகையில்,
மன்னார் மாவட்டத்தில் முந்நூற்றைம்பது முஸ்லிம் குடும்பங்களின் மீள்குடியேற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும் முஸ்லிம்கள் சட்டப்படி மீளக்குடியேறியுள்ளபோதிலும் பெரும்பான்மை இனவாதிகளின் அபாண்டமான கதைகளுக்கிணங்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியுள்ளது.
அத்துடன் அக்கரைப்பற்று –நுரைச்சோலையில் முஸ்லிம்களுக்கென அமைக்கப்பட்ட ஐந்நூறு வீடுகள் கையளிக்கப்படாமல் காடுமண்டிக்கிடக்கின்றன. இவைகளை எல்லாம் தட்டிக்கேட்பதற்கு முஸ்லிம்களிடத்தில் திராணி இல்லாமல் இருக்கிறது. வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளை அமைச்சர் றிஷாத்  பதியுதீன் மாத்திரம் முன்னின்று வென்றெடுப்பது சாத்தியமற்றது. முஸ்லிம் அரசியல் தலைமைகளிடையே ஒற்றுமையின்மையே இதற்குக் காரணம்.
எனவே, எமது தலைமைகள் அரசியல் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு சமூகத்திற்காக ஒன்றிணைந்து அரசியல் கூட்டுமுன்னணியொன்றை உருவாக்குவதன் மூலம் முஸ்லிம்களின் உரிமைகள் இந்த நாட்டில் மறுக்கப்படும்போது ஒருமித்த குரலாக விடயத்தை ஓங்கி ஒலிக்கச் செய்து உரிமைகளை வென்றெடுக்கும் சாத்தியம் ஏற்படும்  என்றார்,

Related Post