கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகளுக்கான அரச நியமனம் வழங்குவது குறித்து அரசாங்கம் சாதகமான முடிவினை இன்னும் ஓரிரு தினங்களுக்குள் அறிவிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேலையில்லா பட்டதாரிகளை இன்று(1.3.2017) புதன்கிழமை பிற்பகள் சந்தித்த போது அவர்களிடம் மேற்கண்டவாறு பிரதியமைச்சர் அமீர் அலி கூறினார்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கிய கோரிக்கை கடிதத்தினையும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகளிடம் வழங்கி வைத்த பிரதியமைச்சர் அமீர் அலி இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குவது குறித்து பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவை இரண்டு முறை சந்தித்து கலந்துரையாடியுள்ளேன்.
அதில் முதலாவது சந்திப்பின் போது வேலையில்லா பட்டதாரிகளின் விபரங்களை தருமாறு பிரதம மந்திரி என்னிடம் கோரினார் பின்னர் இரண்டாவது சந்திப்பின் போது அந்த விபரங்களை நான் கையளித்தேன். எனது அலுவலகம் திறப்பதற்காக பிரதம மந்திரி வருகை தந்தபோதே இரண்டாவது தடவை சந்தித்தேன். இதன் போது நிதியமைச்சரும் இருந்தார்.
வேலையில்லா பட்டதாரிகள் அனைவரையும் பயிற்சியடிப்படையிலாவது உள் வாங்கி அவர்களுக்கான அரச தொழில் நியனத்தை வழங்குமாறு கோரியுள்ளேன்.
இது அரசியலுக்காக நான் செய்ய வில்லை. நானும் ஒரு பட்டதாரி என்ற வகையில் ஒரு பட்டதாரியின் மனோ நிலையை அறிந்தவன் என்ற வகையில் நான் இதை செய்தேன்.
கொட்டும் மழையிலும் வெயிலிலும் நீங்கள் ஒன்பதாவது நாளாக இவ்விடத்தில் அமர்ந்து சத்தியாக்கிரக போராட்டத்தினை நடாத்திக் கொண்டிருக்கின்றீர்கள்.
உங்களுக்கு ஒரு சாதகமான தீர்வு அரசாங்கத்திடமிருந்து குறிப்பாக பிரதம மந்திரியிமிருந்து இன்னும் ஓரிரு நாட்களுக்குள் வருமென எதிர்பார்க்கின்றேன்.
மிகவும் கஸ்டப்பட்டு பல்கலைக்ழகங்களில் படித்து விட்டு தொழிலுக்காக இவ்வாறு போராட்டம் நடாத்த வேண்டியுள்ளது.
உங்கள் போராட்டம் வெற்றியளிக்க வேண்டும் அதற்கு என்னாலான இந்த முயற்சிகளை நான் செய்துள்ளேன் என்றார்.
மட்டக்களப்பு நகரில் வேலையில்லா பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 9வது நாளாக புதன்கிழமையும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.