இவரது படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவிலுள்ள மீன் விற்பனை நிலையமொன்றைச் சேர்ந்த நபரொருவரையும், சேதவத்தையைச் சேர்ந்த நாட்டாமை ஒருவரையும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நேற்று வியாழக்கிழமை (01) கைது செய்தனர்.
வர்த்தகர் கடத்தப்பட்ட இடத்திலுள்ள சீ.சீ.டிவி கெமராக்களில் பதிவாகியுள்ள வீடியோ ஆதாரங்களைக் கொண்டே, 22 மற்றும் 23 வயதுடைய மேற்படி சந்தேகநபர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மேற்படி படுகொலையில், அறுவர் தொடர்புபட்டிருக்கலாம் என்றுத் தெரிவிக்கும் பொலிஸார், பொல்லு அல்லது இரும்பொன்றினால், சுலைமானின் காதுப்பகுதியில் பலமாகத் தாக்கியதை அடுத்து, அவரது கைகளும் கால்களும் கட்டப்பட்டு, வாயில் பிளாஸ்டரும் ஒட்டப்பட்டிருந்ததாகக் கூறினர்.
வாடகை வாகனமொன்றில், மாவனெல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வர்த்தகரின் வாயிலிருந்த பிளாஸ்டரைக் கழற்றிவிட்டு, அவரது தந்தையிடம் 5 கோடி ரூபாயை கப்பமாகக் கோருவதற்காக சொத்து விவரங்களைக் கேட்க, கடத்தல்கார்கள் முற்பட்டுள்ள போதிலும், ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், வர்த்தகரை அழைத்துச் சென்ற வாகனத்தை, கொலையுடன் தொடர்புடைய மேலும் சிலர், முச்சக்கரவண்டி உள்ளிட்ட சில வாகனங்கள் மூலம், இறம்புக்கனை வரை பின்தொடர்ந்துள்ளனர் என்றும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும், மாவனெல்ல பகுதியில் வைத்து, வர்த்தகரின் அலைபேசி, தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதென்றும் கண்டுபிடித்துள்ள இரகசிய பொலிஸாரின் விசேட விசாரணைக் குழுவொன்று, மேலும் பல சாட்சியங்களைத் திரட்டுவதற்காக, ஹெம்மாத்தகம பிரதேசத்துக்கு விரைந்துள்ளது.
இதேவேளை, மேற்படி வர்த்தகரைக் கொலை செய்வது தொடர்பில், மிகவும் துல்லியமான முறையில் திட்டம் வகுக்கப்பட்டிருந்ததாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.