பம்பலப்பிட்டி -கொத்தலாவல எவனியூவில் இருந்து கடத்தி படுகொலை செய்யப்பட்ட 29 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான சகீப் சுலைமானை கடத்தல், படுகொலை திட்டத்தை நெறிப்படுத்தியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் ஒருவரை குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற அனுமதியுடன் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த 8 சந்தேக நபர்களுக்கு சொந்தமான 13 தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்தி நடத்தப்பட்ட விசாரணையிலேயே பிரதான சந்தேக நபராக கருதப்படும் கொலை செய்யப்பட்ட வர்த்தகரின் நம்பிக்கைக்குரிய சேவகரான சந்தேக நபரின் சகோதர முறையிலான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைதான சந்தேக நபரை 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்த பின்னர் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் பொலிஸார் ஆஜர் படுத்தியுள்ளதுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க இதன் போது நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கைதான சந்தேக நபருக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியமை, தெரிந்துகொண்டே கொலை, கடத்தல் தகவல்களை மறைத்தமை, சாட்சிகளை அழிக்க முயற்சித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
9 ஆவது சந்தேக நபராக இறுதியாக கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 7 ஆவது சந்தேக நபர், வர்த்தகர் கொலையின் பின்னர் வர்த்தகரின் தொலைபேசியில் இருந்தே அழைப்பொன்றை ஏற்படுத்தியுள்ளார். அதன் போது வர்த்தகர் இறந்துவிட்டதாகவும் அது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கை குறித்தும் ஆலோசனைக் கோரியுள்ளார். இந் நிலையில் தற்போது இறுதியாக கைதான சந்தேக நபரே மாவனல்லை – உக்குலாகம பகுதியில் சடலத்தை கைவிட ஆலோசனை வழங்கியுள்ளார். அவரின் ஆலோசனைக்கு அமைவாகவே கடத்தல், கொலை உள்ளிட்டவை நடந்துள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸார் குறித்த குற்றங்களை புரிய நெறிப்படுத்தலை முன்னெடுத்தார் என அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
இதனைவிட 7 ஆவது சந்தேக நபருடன் கடத்தல் தினமான கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி முதல் சந்தேக நபர் தொலைபேசி வழியே தொடர்பில் இருந்துள்ளமையும் அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ன் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஸாந்த டி சொய்ஸாவின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரதிலக மற்றும் அதன் பொறுப்பதிகாரி நெவில் டி சில்வா ஆகியோரின் கீழான சிறப்புக் குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.