“ஷரிஆ” சட்டத்தை இச் சபையில் எதிர்த்தவர்கள் இன்று மரண தண்டனை எமது நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டுமென இச் சபையின் பிரேரணையை முன்வைப்பதன் மூலம் பரஸ்பர விரோத அரசியலை வெளிப்படுத்தியுள்ளனர் என பிரதியமைச்சர் டிலான் பெரேரா நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குற்றவியல் கருமங்களில் சீனாவுடன் பரஸ்பர உதவியளித்தல் தொடர்பான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்தார். பிரதியமைச்சர் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராவாவாரா? அனுர திஸநாயக்க எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாவாரா? என எவரும் கனவு கூட கண்டிருக்கமாட்டார்கள்.
ஆனால் கனவு விடயம் இன்று நனவாகியுள்ளது. இதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து இணக்கப்பாட்டு ஆட்சியை ஏற்படுத்தியதே இவ்வாறான வரலாற்று மாற்றத்தை கனவு காணாத மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது.
எனவே இனியும் இதனை கட்சி நிறக்கண்ணாடிகளால் பார்க்காது யதார்த்தத்தை புரிந்து எதிர்ப்பவர்கள் செயற்பட வேண்டும். இது ஒரு புதிய அரசியல் கலாசாரமாகும்.
அன்று ரிஷானாவை சவூதியில் தூக்கிலிடப்பட்ட போது “ஷரிஆ” சட்டத்தை இச் சபையில் எதிர்த்தவர்கள் இன்று இச் சபையில் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டுமென பிரேரணையை முன்வைக்கின்றனர். இதுதான் பரஸ்பர அரசியல் விரோதச் செயற்பாடாகும்.
சட்டங்கள் விரைவாக செயற்படுத்தப்பட வேண்டும். சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், கொலைகள் போன்ற குற்றச் செயல்கள் தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் சட்டங்கள் இயற்றப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
குற்றம் ஒழிக்கப்பட வேண்டும் குற்றத்தை தூக்கிலிட வேண்டும் என்றும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.