வங்காளதேசம் ’பீஸ் டிவி’க்கு தடை விதித்து உள்ளநிலையில், அந்நாட்டில் அமைதி நிலவும் என்று பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறி உள்ளார்.
22 பேர் கொல்லப்பட்ட டாக்கா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டு கொண்டது.
இந்தியா இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. வங்காளதேச உள்துறை அமைச்சகமும் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டது. ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் ’பீஸ் டிவி’ சேனலுக்கு ஞாயிறு தடை விதித்தது.
இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ள பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் டுவிட்டரில், “’பீஸ் டிவி’ தடை செய்யப்பட்டது, வங்காளதேசத்தில் அமைதி நிலவும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
டாக்காவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஜாகிர் நாயக் பேச்சால் ஊக்குவிக்கப்பட்டனர் என தெரியவந்ததும் தஸ்லிமா நஸ்ரின் தனது டுவிட்டரில் அதுதொடர்பான வீடியோக்கள் சுட்டிகளை இணைத்து கடுமையான பதிவுகளை வெளியிட்டு இருந்தார். ஜாகிர் நாயக் ஒரு பயங்கரவாத ஆதரவாளர். அவர் இஸ்லாமிய இளைஞர்கள் பயங்கரவாதிகளாக ஊக்குவித்து வருகிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.