ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் குழுவொன்று அறிவித்துள்ளது.
ஆனால், சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே தலைவராக நியமித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உள்ளிட்ட குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமையும் 15க்கும் அதிகமானவர்கள் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டனர். அவர்களே, சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக மைத்திரிபால சிறிசேனவையும், பொதுச் செயலாளராக துமிந்த திஸ்ஸநாயக்கவையும் நியமித்துள்ளனர்.
இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் நேற்று கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்னொரு தொகுதி செயற்குழு உறுப்பினர்களே மஹிந்த ராஜபக்ஷவை தலைவராகவும், அனுர பிரியதர்ஸன யாப்பாவை பொதுச் செயலாளராகவும் மீண்டும் தெரிவு செய்துள்ளனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.