– அனஸ் அப்பாஸ் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் “வில்பத்து தொடர்பான எமது நிலைப்பாடு” எனும் தலைப்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று(05) காலை கொழும்பு ரேனுகா ஹோட்டலில் இடம்பெற்றது.
அமைச்சர்களாக ஏ.எச்.எம்.பௌசி , ரிஷாட் பதியுத்தீன், பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர்ரஹ்மான், இஷாக் ரஹ்மான், எம்எச்எம் நவவி, மாகாணசபை உறுப்பினர்களான அர்ஷத் நிசாம்தீன், ஜனுபர், தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அசாத்சாலி, ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிச் செயலாளர் தாசிம் மௌலவி மற்றும் முஸ்லிம் லீக்கைச்சேர்ந்த சட்டத்தரணி ஷஹீட் ஆகியோர் உட்பட சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இதில் முஸ்லிம் மீடியா போர்த்தின் தலைவர் N.M. அமீன் அவர்களின் தலைமையில் அவையில் ஒன்றுகூடினர்.
முதலில் வில்பத்து சூழலியல் நிலைப்பாடுகள், முசலி மீள்குடியேற்றம் தொடர்பில் பேராசிரியர் நௌபல் அவர்கள் உரையாற்றினார்.
விடுதலைப்புலிகளுடன் இணையாமல் இருந்ததுதான் அந்த மக்கள் செய்த பிழையா? வடக்கு-கிழக்கில் மற்றும் பொலன்னறுவை எல்லைப்பகுதிகளில் முஸ்லிம்களை கொன்றுகுவித்தும், முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்தனர். 1990 ஆம் ஆண்டு புலிகளால் அடித்துவிரட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் மீண்டும் மது பரம்பரைக்காணிகளில் குடியேறும்போது இனவாதிகளும் இனவாதச்சூழலியலாளர்களும் அவர்களை கொடுமைப்படுத்துகின்றனர். தமது சொந்தக் காணிகளில் வளர்ந்திருக்கும் பற்றைக்காடுகளை அழித்துக்குடியேறும் போது வில்பத்தை அவர்கள் அழிக்கின்றார்கள் என்றும் இவர்கள் கூக்குரல் இடுகின்றனர்.
அன்று அவர்கள் புலிகளுடன் இணைந்திருந்தால் இன்று தமது வாழ்விடங்களில் இருந்திருப்பர், இன்று கூவித்திரியும் சூழலியலாளர்களுக்கு பேசவும் நேர்ந்திருக்காது. தமது இடங்களை மீண்டும் கோரும் இந்த அப்பாவி மக்களை தேசதுரோகிகள் போன்று நடாத்துவதாகவும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள், டலஸ், வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய அரசியல்வாதிகளின் உரைகளை பார்க்கும்போது, அவர்கள் சிங்கள-முஸ்லிம் உறவை சீர்குழைக்க இவ்வாறான பிழையான நிலைப்பாடுகளை மக்கள் மன்றில் முன்வைப்பது அவர்கள் மீதான சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துவதாகவும், தோல்வியடைந்த கடந்த அரசின் இனவாத செயற்பாடுகளுக்கு மீண்டும் எரியூட்டும் செயற்பாடுகளுக்கு அடித்தளமிடுவதாகவும் அவை அமைகின்றன என்றும் கூறினார்.
அமைச்சர் ரிஷாட் “வில்பத்து விவகாரம் ஊடகங்கள் ஊடாகத்தான் திரிபுபடுத்தப்படுகின்றது என்றும், சிங்கள ஊடகங்கள் முஸ்லிம்களையும், முஸ்லிம் அமைச்சர்களையும் நாட்டிற்கு அநியாயம் ஒன்றை இழைக்கின்ற நிலைப்பாட்டில் வைத்துக் காட்டுவதாகவும் கூறினார். கடந்த அரசில் கொழும்பில் இருந்த ஒரு அரசியல்வாதி, தொழிநுட்ப வரைபடத்தின் உதவியுடன் மக்கள் குடியேறிய பகுதிகளை வில்பத்து வனப் பிரதேசமாக அடையாளப்படுத்தி மூன்று பகுதிகளாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டிருந்தார்.
2011 இல் ரகசியமாக இரவோடு இரவாக இது இடம்பெற்றதுடன், 2015 இல் தான் இவ் அறிவித்தல் வர்த்தமானியில் இடம்பெற்றது என்றும், அதுவரை அதுதொடர்பில் யாரும் அறியவில்லை” என்றும் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் வழங்கினார்.
“இது கடந்த அரசின் தீர்மானம். இது தேசிய பிரச்சினை. சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு சவூதி அரசு 500 குடியேற்றங்களை வழங்கியது. முஸ்லிம்கள் வேண்டியதன் பேரிலேயே மீள்குடியேற்றத்திற்காக மன்னார் மக்களுக்கு 300 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்றும் கட்டார் நிதியுதவியிலேயே குடியேற்றங்ளை நிறுவுகின்றோம். வீடுகளை கட்டி முடியும் தருவாயிலிலேயே அரசு இவ்வாறு வர்த்தமானி அறிவிப்பை செய்கின்றது. ஏன் இதை ஏற்கனவே செய்ய முடியாமல் போனது? 3850 ஏக்கர் நிலத்தில் “நாமல் கிராமம்” என பெயரிட்டு வன அழிப்பை செய்து குடியேற்றங்களை செய்தபோது எங்கிருந்தார்கள் இவர்கள்? 5000 ஏக்கர் வனப் பிரதேசத்தை கஜுப் பயிர் செய்கைக்காக கடற்படை கைப்பற்றியபோதெல்லாம் சூழலியலாளர்கள் என்று கூறும் இவர்கள் எங்கிருந்தனர்? ஒட்டாரா எனும் பெண்மணியே கூகிளில் இருந்து பெற்ற தகவல்களை சமூக ஊடகங்களில் பதிந்து சூழலியல்சார் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றார்” என்று கூறிய அசாத் சாலி அவர்கள் “முஸ்லிம்கள் அரசிடம் அபிவிருத்திகளை கோரவில்லை. நாமே அதை செய்துகொண்ட நிலையிலும், அரசு எம் மீது பலி போடுவது தகுமா? இன நல்லுறவை பேணும் முஸ்லிம்களுக்கு, நன்றி சொல்ல அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.” என்றார்.
“ஆளும் அரசின் அமைச்சர்கள் ஊடக சந்திப்பில் பேசுவதால் மட்டும் வில்பத்து பிரச்சினை தணியுமா?” என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த முஜிபுர் ரஹ்மான் M.P அவர்கள், “இதை முடிவுக்கு கொண்டுவர முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் சந்திப்பொன்றை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.