Breaking
Mon. Dec 23rd, 2024

எமது முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வில்பத்துக் காணியில் அவர்களை குடியமர்த்த முற்பட்டபோது நான் காட்டை அழித்து மக்களை குடியமர்த்துகின்றேன் என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இந்த நாட்டு ஜனாதிபதி கூட வில்பத்தில் அழிவு நடந்திருக்கின்றதென்கின்றார். ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ பயந்து நாம் அரசியல் செய்யவில்லை. எமது சமூகத்திற்கு அநியாயம் நடக்கின்றபோது தைரியமாக பேசுகின்ற சக்தியை இறைவன் எமக்குத் தந்திருக்கின்றான் அதுவரை மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட தேர்தல் காரியாலயம் சாய்ந்தமருது பிரதேசத்தில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பல்வேறான இன்னல்களை அனுபவித்து அகதிகளாக்கப்பட்ட எமது முஸ்லிம் மக்களை சொந்த இடங்களுக்கு குடியமர்த்த முற்பட்டபோது வில்பத்து காடழிப்பு என்னும் புதிய பிரச்சினை வேண்டுமென்றே சிலரால் அரங்கேற்றப்பட்டது. வில்பத்து என்பது புத்தளம் மாவட்டத்திற்குரியதாகும்.

எமது முஸ்லிம் மக்களுக்குச் சொந்மான காணிகள் இயற்கைக் காட்டுக்குச் சொந்தமானது என கூறுகின்றார்கள். யாருக்கும் தெரியாமல் சுமார் 15125 ஏக்கர் காணி வனப்பிரதேசத்திற்குச் சொந்தமானதென வர்த்தமானியில் அறிவித்து பிரகடனம் செய்யப்பட்டிருக்கின்றது. அறிஞர்கள் என்று சொல்லும் சிலர் வில்பத்துவை முஸ்லிம்கள் அழிக்கின்றார்கள் என்றும் அதிலுள்ள சுமார் இருபது யானைகளையும் கொன்றுவிட்டதாகவும் சொல்கின்றார்கள். அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் பொய்ப்பிரச்சாரம் செய்து என்னை சிலர் மதவாதியாகவும் இனவாதியாகவும் சித்தரிக்க முற்படுகின்றனர்.

மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் தீகவாபி பிரதேசத்தினை ஆக்கிரமிப்புச் செய்கின்றார் என்று அன்று பிரச்சினை எழுந்தபோது சிங்களவர்களின் காணிகளை நாங்கள் ஆக்கிரமிப்புச் செய்யவில்லை முஸ்லிம்களுக்கான எம்மவர்களின் காணிகளையே நாம் பெற்றுக் கொள்ள முற்படுகின்றோம் என்று குரல் கொடுத்ததைப்போலவே எமது மக்களின் காணிகளைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் போராட்டங்களையும் மன்றாட்டங்களையும் நான் தற்போது செய்து வருகின்றேன்.

எமது முஸ்லிம் மக்களின் மத ஸ்தங்களை வேண்டுமென்றே சேதப்படுத்தி பொருளாதாரத்தை சூறையாட முயற்சித்த பெரும் மதவாத இயக்கமான பொதுபல சேனாவை நான் எதிர்த்தபோது அவ்வியக்கம் எனக்கெதிராக செயற்பட்டது. சுமார் ஐம்பது அமைச்சுக்கள் இலங்கையில் இருந்தபோதிலும் எனது அமைச்சுக்குள் அவ்வியக்கத்தினர் புகுந்து அட்டகாசத்தினை காட்டினர். நான் அவ்வியக்கத்திற்கும் அதன் செயலாளர் ஞானசார தேரருக்கும் ஐந்து வழக்குகளை தாக்கல் செய்திருக்கின்றேன். இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்குக் காரணமான நாசகார செயற்பாடுகளைப் புரிந்து வந்த பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் மோதவிட்டு இனக்கலவரத்தை தோற்றுவிக்க எத்தனித்தது.

பொதுபலசேனாவின் நாசகாரச் செயற்பாடுகளால் இந்நாட்டில் வாழும் சுமார் பத்து சதவீத மக்கள் அச்சமடைந்தனர். அவ்வியக்கத்திற்கு துணை நின்ன மஹிந்தவின் ஆட்சியினை மாற்றுவதற்கு நாம் பலமாக குரல் கொடுத்தோம். அமைச்சுப் பதவியினை துச்சமென நினைத்து உதறித்தள்ளி விட்டு வெளியே வந்தோம். ஆனால் முஸ்லிம்களுக்காக மறைந்த தலைவர் அஷ்ரஃப்பினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை தலைமை தாங்கும் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களுக்கு பாரியளவு அநியாயங்கள் நடந்த பின்பும் மஹிந்தவுடன் ஒட்டியிருந்தார். கடந்த தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு நடந்த பின்பு மக்கள் எம்மை ஒதுக்கி விடுவார்கள் நாம் தனித்துவிடுவோம் என்ற காரணத்தை காட்டி ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தை மஹிந்தவிடம் எதிரிகளாகக் காட்டிவிட்டு இறுதி நேரத்தில் அவரை விட்டு வந்தார்.

தேர்தல் காலங்களில் பள்ளிவாசல்களை காரணம் காட்டி வாக்குகளைப் பெற்று வந்த ரவூப் ஹக்கீமுக்கு நல்லாட்சியில் நகர அபிவிருத்தி அமைச்சுப் பதவி கிடைத்தது. சுமார் அறுபது வருட கால பழைமை வாய்ந்த தம்புள்ள பள்ளிவாசல் காணி நகர அபிவிருத்தி அமைச்சின் கீழேதான் இருக்கின்றது. சுமார் ஆறு மாத காலம் இந்த அமைச்சுப் பொறுப்பினை வகித்து வந்த ரவூப் ஹக்கீமுக்கு பள்ளிவாசல் காணியினை பெற்றுக் கொடுக்கவோ அல்லது கட்டடத்தினை கட்டி முடியாமல் போனதற்கான காரணம் என்ன என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தலைவர்களிடத்தில் மக்கள் மீது அன்பும் பலமான மார்க்க்பபற்றும் இருக்க வேண்டும் அப்போதுதான் மக்களையும் சமூகத்தினையும் சிந்திக்கின்ற தன்மை ஏற்படும்.

பல தியாகங்களுடன் இழப்புக்களுடனும் மறைந்த பெருந்தலைவர் அஷ்ரஃபினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைப்மைப் பொறுப்பினை சுமார் பதினைந்து வருடங்கள் ஏற்றுக் கொண்டு செயற்பட்டு வரும் ரவூப் ஹக்கீம் எமது முஸ்லிம் சமூகத்திற்கு இதுவரை பெற்றுக் கொடுத்த இலாபம் என்ன? இந்த நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலாவது நமது மக்ளுக்காக பெற்றுக் கொடுக்கப்பட்ட நன்மை என்ன என்பதை நான் பகிரங்கமாக அவரிடம் கேட்க விரும்புகின்றேன்.

காலத்திற்குக் காலம் நமது மக்களை ஏமாற்றி ரவூப் ஹக்கீம் அரசியல் செய்து கொண்டிருக்கின்றார். சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஒரு கொள்கைகூட ரவூப் ஹக்கீமிடம் இல்லை. கட்சி என்பது மதமல்ல. மார்க்கமுமல்ல. அதனால்தான் தலைவர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் எல்லோருக்கும் பொதுவான கட்சியான தேசிய ஐக்கிய முன்னணியினை அவர் இறக்கும் இறுதிக்காலத்தில் ஆரம்பித்தார். அந்த வகையில்தான் நாம் எப்படி வாழ வேண்டும். நமது சமூகத்திற்காக எவ்வாறு செயற்பட வேண்டும் என சன்மார்க்கம் இஸ்லாம் காட்டித் தந்த வழியில் நின்று நேரான பாதையில் நாம் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

Related Post