இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற விண்ணப்பித்தவர்களில் 50 வீதமானோர் கடமையை நிறைவேற்றுவதில் அக்கறையின்றியும் விருப்பமின்றியும் இருக்கின்றனர்.
ஹஜ் விண்ணப்பதாரிகள் தமது பயணத்தை எழுத்து மூலம் உறுதிசெய்யாவிட்டால் ஹஜ் பயணத்துக்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாதென ஹஜ் குழுவின் உறுப்பினரும் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் பிரத்தியேக செயலாளருமான எம்.எச்.எம்.பாஹிம் தெரிவித்தார்.
2016 ஆம் வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு 4500 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இவர்களில் 3000 பேருக்கு முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் பயணத்தை உறுதிசெய்யுமாறு கடிதங்களை அனுப்பிவைத்துள்ள போதிலும் பல வாரங்கள் கடந்தும் இதுவரை 50 வீதமானோரே தமது பயணத்தை எழுத்து மூலம் உறுதி செய்துள்ளனர்.
ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்த வரிசைக் கிரமங்களுக்கேற்பவே தெரிவுகள் இடம்பெறவுள்ளன.
முதல் 3000 விண்ணப்பதாரிகள் கொண்ட தொகுதியில் பயணத்தை உறுதி செய்யாத பயணிகளுக்குப் பதிலாக ஏனைய விண்ணப்பதாரிகள் தெரிவுசெய்யப்படுவார்கள்.
இறுதி நேரத்தில் ஹஜ் விண்ணப்பதாரிகள் பயணத்தை உறுதி செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. அதனால் இவ்வருடம் ஹஜ் பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகள் உடனடியாக தமது பயணத்தை திணைக்களத்திடம் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
அநேக விண்ணப்பதாரிகள் திணைக்களத்தில் தமது பயணத்தை உறுதி செய்து கொள்ளாது ஹஜ் முகவர் நிலையங்களில் தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திணைக்களத்தில் தமது பயணத்தை உறுதிசெய்து கொண்டுள்ளவர்களுக்கே ஹஜ் வாய்ப்பு வழங்கப்படும்.
திணைக்களம் இதற்கான கடிதங்களை முதல் 3000 விண்ணப்பதாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
ஹஜ் முகவர்கள் நியமனம் தொடர்பான நேர்முகப்பரீட்சை கடந்த 2 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. இது எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை சில ஹஜ் முகவர்களின் நிதிமோசடி தொடர்பான முறைப்பாடுகள் ஹஜ் கமிட்டிக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.
நியமனத்தின் போது இம்முறைப்பாடுகளும் ஏற்கனவே ஹஜ் பயணிகளின் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட ஹஜ் விசாரணைக்குழுவின் அறிக்கையும் கவனத்திற்கொள்ளப்படும் என்றார். (விடிவெள்ளி)