பலஸ்தீன போராட்டக் குழுவான ஹமாஸ் அமைப்பை தீவிரவாத குழுவாக அறிவித்த எகிப்து நீதிமன்றத்தின் தீர்ப்பை அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து அந்த பட்டியலில் இருந்து அகற்றியுள்ளது.
இவ்வாறானதொரு தீர்ப்பை வழங்குவதற்கு கீழ் நீதிமன்றத்திற்கு தகுதியில்லை என்று குறிப்பிட்டே அந்த தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்திருப்பதாக நீதிமன்ற அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு வரவேற்றுள்ளது.
ஹமாஸ் அமைப்பு எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கிளையொன்றாகும். 2013 இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை எகிப்து அரசு தீவிரவாத குழுவாக பட்டியலிட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு முந்தைய தவறை சரிசெய்தது என்று ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. “பலஸ்தீனர்களின் போராட்டத்தில் கெய்ரோவின் கடப்பாட்டை இந்த தீர்ப்பு பிரதிநிதித்துவப்படுத்துகிறது” என்று ஹமாஸ் பேச்சாளர் சமி அபூ சுஹ்ரி குறிப்பிட்டுள்ளார்.