தெற்கு இஸ்ரேல் பகுதியில், ஹமாஸ் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 4 வயது குழந்தை பலியானதாக இஸ்ரேல் செஞ்சுலுவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஸா முனையிலிருந்து, நேற்று இரவு தெற்கு இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் நடத்தியத் தாக்குதலில், மழலையர் பள்ளி அருகே நின்று கொண்டிருந்த கார் தகர்க்கப்பட்டது. இதில் காரில் இருந்த 4 வயது குழந்தை பரிதாபமாக பலியானதாக இஸ்ரேல் செஞ்சுலுவை சங்கத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்மின் நெதன்யாகு விடுத்துள்ள எச்சரிக்கையில், “ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதில் தரப்படும்” என்றார்.
காஸா – இஸ்ரேல் இரு தரப்பிலும் நடந்துவரும் பிரச்சினையில் எகிப்து தலையிட்டு, போர் நிறுத்தத்திற்கான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் இரு தரப்பினருக்கும் உடன்பாடி ஏற்படவில்லை.
கடந்த இரு மாத காலமாக தொடர்ந்துவரும் தாக்குதல்களில், காஸாவில் நடந்துவரும் போரில் 469 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவம் தரப்பில் 64 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், ஹமாஸின் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டு குழந்தை ஒன்று தற்போது பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.