Breaking
Sat. Nov 16th, 2024

தலையில் ஸ்கார்ப் அணிந்து பள்ளிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியை ராஜினாமா செய்துள்ளது பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக எதிர்ப்பு உருவாகியுள்ளது.

கேரள சமாஜத்தின் நிர்வாகத்தில் ஜூபில என்ற பள்ளிக்கூடம் பெங்களூருவில் செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஷினா என்ற ஆசிரியைக்குக் கடந்த மே மாதம் வேலை கிடைத்தது. ஜூனில் பள்ளி திறந்ததும் ஹாஷினா வேலைக்குச் சென்றுள்ளார்.

தலையில் ஸ்கார்ப் அணிந்து வேலைக்கு வந்த ஆசிரியை ஹாஷினாவிடம் முதல் நாளிலேயே, “இதற்குப் பள்ளி நிர்வாகம் எதிரானது. எனவே தலையிலிருந்து ஸ்கார்ப்பினை நீக்க வேண்டும்” என பள்ளி தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்கார்ப் அணிந்து வேலை செய்ய அனுமதி கிடைக்காது என உறுதியான நிலையில் தன் வேலையை ஹாஷினா ராஜினாமா செய்தார். மேலும், சம்பவம் குறித்து மாநில முதல்வர் மற்றும் சிறுபான்மை கமிசன்களுக்குப் புகாரும் அளித்துள்ளார்.

இச்சம்பவம் வெளியானதும் “தலைமை ஆசிரியையின் அறிவுரையை பள்ளி நிர்வாகத்தோடு சம்பந்தப்படுத்தி குறிப்பிட்ட ஆசிரியை தவறாக புரிந்துள்ளார். அவ்வாறான தடையேதும் பள்ளி நிர்வாகம் போடவில்லை. ஆசிரியையின் ராஜினாமா கடிதம் பள்ளிக்கு இன்னும் கிடைக்கப்பெறவும் இல்லை” என பள்ளி நிர்வாகமான கேரள சமாஜம் அறிவித்துள்ளது.

தலையில் ஸ்கார்ப் அணிய விடாததைத் தொடர்ந்து ஆசிரியை ராஜினாமா செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Post