ஹிட்லரை விடவும் படுமோசமான தோல்வியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை குருநாகலில் பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வி அறிவிலும், விழிப்புணர்விலும் சிறந்து விளங்கும் குருநாகல் மாவட்ட மக்களின் வாக்குகளை அபகரிப்பதென்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இயலாத காரியமென்றும் அவர் குறிப்பிட்டு்ள்ளார்.
அம்பாந்தோட்டையைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ, பரசூட் மூலம் குருநாகல் மாவட்டத்தில் வந்து குதித்தாலும், அவரது சாகசங்களைக் கண்டு குருநாகல் மாவட்ட மக்கள் ஏமாறமாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமாக சிறிகொத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும் போதே அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தனது குடும்பத்தாரை காப்பாற்றும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஷ அம்பாந்தோட்டையை விடுத்து குருநாகல் மாவட்டத்தை போட்டியிடுவதற்காக தெரிவு செய்திருக்கலாம். என்றாலும் அவர் அம்மாவட்டத்தில் தங்கமாட்டாரென்றும் எப்படியும் மெதமுலனவுக்கே திரும்பிச் செல்வாரென்றும் எமது மக்களுக்கு நன்கு தெரியும்.
நான் குருநாகல் மாவட்டத்திலேயே பிறந்து வளர்ந்தேன், நாம் கால் வலிக்குமளமவிற்கு ஒவ்வொரு கிராமமாக ஏறி இறங்கியிருக்கிறேன். அம்மக்களின் தேவை என்னவென்பது எங்களுக்கு தெரியும். அவர்களின் நாடித்துடிப்பை நான் அறிவேன். மஹிந்த ராஜபக்ஷவை அவர்கள் தோற்கடிப்பது உறுதி.
அம்பாந்தோட்டையை போன்று சொல்வதை எல்லாம் நம்பும் மக்கள் கூட்டமே குருநாகலையிலும் இருப்பதாக அவர் நினைத்திருந்தால், அது தவறாகும். இதுவரை படித்து அறிந்திராத புது பாடத்தை மஹிந்த ராஜபக்ஷ இம்முறை குருநாகல் மாவட்டத்தில் படிக்கப்போகிறார். இவர் மீது அதிருப்தி கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் எம்முடன் இணைந்த வண்ணமுள்ளனர்.” என்றுள்ளார்.