பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர விவகாரத்தில் நான் எந்த விடயத்திலும் தலையிடவில்லை. அவ்வாறு பொலிஸ் விவகாரத்தில் நான் ஒருபோதும் தலையிடுவதில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.
எனது சொந்த ஊரில் கூட நான் இவ்வாறு செயற்பட்டது கிடையாது. எனது ஆதரவாளர்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தாலும் பொலிஸாரின் விவகாரத்தில் நான் தலையிடமாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்
கேள்வி:- தற்போதைய அரசாங்கம் தொடர்பாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றதே?
பதில்: அவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடைபெறுகின்றது. அதுமட்டுமன்றி சில தவறுகள் நடைபெறாமல் தடுக்கப்படுகின்றன. கடந்த ஆட்சிக்காலத்தில் அவ்வாறு இருக்கவில்லை.
கேள்வி:- நீங்கள் ஹிருணிகா விவகாரத்தில் தலையிட்டதாக கூறப்படுகின்றது.
பதில்:- ஹிருணிகா விவகாரத்தில் நான் எந்தவகையிலும் தலையிடவில்லை. அந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் போது நான் இலங்கையில் இருக்கவில்லை. அதுமட்டுமன்றி நான் இவ்வாறான விவகாரங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாட்டில் தலையிட மாட்டேன். எனது சொந்த ஊரில் கூட நான் இவ்வாறு செயற்பட்டது கிடையாது. எனது ஆதரவாளர்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தாலும் பொலிஸாரின் விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன்.
கேள்வி:- வெள்ளைவேன் கலாசாரம் முடிந்து
டிபென்டர் கலாசாரம் வந்துள்ளாக கூறப்படுகின்றதே?
பதில்:- ஒரு தனிப்பட்ட சம்பவத்தை வைத்துக் கொண்டு இவ்வாறு கூறுகின்றனர். இதில் அரசாங்கம் சம்பந்தப்படவில்லை.
கேள்வி:- சர்வதேச பாடகர் ஹென்றிகே வின் இசை நிகழ்வில் இளைஞர், யுவதிகள் நடந்து கொண்ட விதம் குறித்து அரசின் கருத்து என்ன?
பதில்:- அதில் இளைஞர்கள் எவரும் எதுவும் செய்யவில்லை. இது தொடர்பில் ஜனாதிபதி அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். இவ்வாறு சர்வதேச இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில் தவறில்லை. ஆனால் எமது நாட்டின் கலாசாரம் பாதுகாக்கும் வகையில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படவேண்டும் என்றார்.