இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள். இதன் 71–வது ஆண்டு நினைவுதினம் இன்று (6–ந்தேதி) முதல் 9–ந்தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசிய இடங்களில், இன்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய நேரமான காலை 8.15 மணிக்கு அமைதி மணி ஒலிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று அணுகுண்டு தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்
ஹிரோஷிமாவில் உள்ள அமைதி நினைவு சதுக்கத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் திரண்டிருந்த மக்களிடையே ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, மேயர் கசுமி மத்சுயி ஆகியோர் உரையாற்றினர்.
அப்போது மேயர் பேசுகையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியதை போல் அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க உலக நாடுகளின் தலைவர்கள் முன்வரவேண்டும், அதற்கான முதல் படியை இன்று எடுத்து வைப்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மே மாதம் ஹிரோஷிமா, நாகாசாகி நகரங்களில் பயணம் மேற்கொண்டபோது அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க வேண்டும் என உலக நாடுகளை கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.