அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக தெரிவாகியுள்ள ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற கூடுதல் வாய்ப்புள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் உலக நாடுகள் எதிர்பார்த்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான பொது தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ட்ரம்பிற்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த இரு வேட்பாளர்களில் ஒருவர் தான் அமெரிக்க ஜனாதிபதி பதவியை அடைய முடியும் என அண்மையில் நடந்து முடிந்த வேட்பாளர் தெரிவு செய்யும் தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த இரு வேட்பாளர்களில் யார் ஜனாதிபதி மகுடத்தை சூடுவார்கள் என்ற புதிய கருத்துக் கணிப்பு பொதுமக்களிடையே நடத்தப்பட்டுள்ளது.
புலூம்பெர்க் பாலிடிக்ஸ் என்ற நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கள் கிழமை வரை 750 வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
இதில், ஹிலாரி கிளிண்டனுக்கு 49 புள்ளிகளும், டொனால்ட் ட்ரம்பிற்கு 37 புள்ளிகளும் கிடைத்துள்ளன. அதாவது, ட்ரம்ப்பை விட ஹிலாரிக்கு 12 புள்ளிகள் கூடுதலாக கிடைத்துள்ளன.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பிற்கு வாக்களிக்க மாட்டோம் என 55 சதவிகித மக்களும், ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களிக்க மாட்டோம் என 43 சதவிகித மக்களும் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பு மூலம், ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக புலூம்பெர்க் பாலிடிக்ஸ் தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்டுள்ளதால் தான் அவருக்கு பொதுமக்கள் வாக்களிக்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.