Breaking
Mon. Dec 23rd, 2024

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க அதிபராக பொறுப்பு வகித்துவரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று முன்தினம் ஹிலாரி கிளிண்டனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் அதிபராக வெள்ளை மாளிகையில் கடமையாற்ற ஹிலாரியைவிட தகுதியானவர் யாரும் இல்லை என தற்போது அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக, ஹிலாரி கட்சியினர் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் வீடியோவில் ஒபாமா கூறியுள்ளதாவது:-

எடுத்த பணியை நிறைவேற்றிய தீர வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கும் ஹிலாரியின் மனஉறுதியையும், அர்ப்பணிப்பையும் பல சந்தர்ப்பங்களில் நான் பார்த்துள்ளேன். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் முறையான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார். அதற்கான போராட்டம் எத்தனை பெரியதாக இருப்பினும், இறுதிவரை விடாமுயற்சியுடன் போராடி ஜெயிக்கக் கூடியவாராகவும், இன்றளவும் அந்தப் போராட்டத்தை தொடருபவராகவும் ஹிலாரி திகழ்கிறார்.

2008-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது ஆதரவு வாக்கெடுப்பில் என்னை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினாலும், எனது விருப்பத்தின்படி இந்த நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றினார். அவரது மனஉறுதி, இரக்க சுபாவம், எடுத்த காரியத்தை முடித்தே தீர வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வு போன்றவை அளித்த பலன்களை நான் கண்டிருக்கிறேன்.

அவரோடு இருபதுக்கும் அதிகமான முறை விவாதங்களில் பங்கேற்றவன் என்ற முறையில் அமெரிக்காவின் அதிபராக வெள்ளை மாளிகையில் கடமையாற்ற ஹிலாரியைவிட தகுதியானவர் யாரும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலில் போட்டியிட ஜனநாயக கட்சியின் சார்பில் களமிறங்கியுள்ள மற்றொரு உத்தேச வேட்பாளரான பெர்னி சாண்டர்ஸ் ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். எனினும், குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராவதை தடுக்கும் வகையில் ஹிலாரியுடன் சேர்ந்து போராடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post