Breaking
Sun. Dec 22nd, 2024

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன் (ஜனநாயக கட்சி), டொனால்டு டிரம்ப் (குடியரசு கட்சி) ஆகியோர் இடையேயான முதல் நேரடி விவாதம் நியூயார்க்கில் உள்ள ஹோப்ஸ்ட்ரா பல்கலைக் கழகத்தில் இன்று நடந்தது.

அப்போது அவர்கள் இருவரும் வேலை வாய்ப்பு, ஈராக் போர் மற்றும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளில் தங்களின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.

இந்த விவாதம் கார சாரமாக நடந்தது. இந்த விவாதத்தை 10 கோடி மக்கள் பார்த்தனர். இது அமெரிக்க வரலாற்றில் மிக அதிகம் பேர் பார்த்த நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.

விவாதத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பேசும் போது,“வேலை வாய்ப்புகள் நாட்டை விட்டு (அமெரிக்காவை விட்டு) செல்கின்றன. அதற்கு மிக குறைந்த அளவிலான வர்த்தகமே காரணம்” என குற்றம் சாட்டினார்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் பேசும் போது, ‘நாட்டின் முதலீடு அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கிறேன். மேலும் நான் அதிபர் ஆனால் 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்’ என்றார்.

அமெரிக்க பொருளாதாரத்தை பற்றி பேசிய டிரம்ப், ‘நாம் பெரிய அளவில் கொளுத்த நிலையில் அதே நேரம் வெறுமையான நிலையில் இருக்கிறோம். ஹிலாரி கிளிண்டன் அனைத்தையும் பேசுகிறார். ஆனால் செயல்பாடு எதுவும் இல்லை.

உங்கள் (ஹிலாரி) வாழ்நாள் முழுவதையும் ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் போரிட தயாரா? என கேட்கிறேன். அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள் (கறுப்பர்கள்) நரகத்தை அனுபவிக்கின்றனர். ஏனெனில் அவர்களின் வாழ்க்கை அபாயகரமாக உள்ளது. கறுப்பின மக்களை போலீஸ் சுட்டு கொல்கிறது’ என்றார்.

ஹிலாரி கிளிண்டன் பேசும் போது, “டொனால்டு டிரம்ப் முறையாக வரி செலுத்தவில்லை. ராணுவத்துக்கும், ராணுவ மூத்த வீரர்களுக்கும், பள்ளிகள் மற்றும் மக்களின் சுகாதார திட்டங்களுக்கு நிதி உதவி செய்ததில்லை.

டிரம்ப் இன வெறியாளர். அமெரிக்காவின் முதல் வம்சாவளி கறுப்பின அதிபர் பாரக் ஒபாமாவை பற்றி மனம் வருந்தும்படி பொய்யான தகவலை இவர் வெளியிட்டார். அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை என்றார். பின்னர் 2 வாரங்களில் அதில் தனது நிலையை மாற்றிக் கொண்டார்.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பகிரங்கமாக பாராட்டி பேசினார். அது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதை சிறிதும் ஏற்க முடியாது. எனவே தலைமை பொறுப்புக்கு டொனால்டு டிரம்ப் தகுதியற்றவர்” என்றார்.

By

Related Post