அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து நடந்த, முதல் நேரடி விவாதத்தில், ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளின்டன், (வயது 68) தன் நேர்த்தியான வாதத் திறமையால் அசத்தினார்.
அவருடைய வாதத்தை சமாளிக்க முடியாமல், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், (வயது 70), சொதப்பினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர், 8ல், நடக்கிறது.
இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக, முன்னாள் வெளியுறவு அமைச்சரும், முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரியும், குடியரசு கட்சி சார்பில், தொழிலதிபர் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.
அதிபர் தேர்தலுக்கு முன், இரு கட்சியின் வேட்பாளர்களும், பொதுமக்கள் முன், நேரடி விவாத்தில் பங்கேற்பர்.
அதன்படி நடக்க உள்ள மூன்று விவாதங்களில், முதல் விவாதம், நியூயார்க் நகருக்கு அருகில் உள்ள,ஹெம்ஸ்டெட் நகரில் நேற்று முன்தினம் நடந்தது.
ஏராளமான மக்கள் முன்னிலையில் நடந்த இந்த விவாதத்தின் போது, பொருளாதாரம், பயங்கரவாத தடுப்பு, வெளியுறவு கொள்கை உட்பட, பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும், தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.
இந்த வாதத்தின்போது, ஹிலாரி, எவ்வித பதற்றமும் இன்றி, தன் வாதத்தை எடுத்து வைத்தார், டிரம்பை பல கேள்விகளும், எதிர்கேள்விகளும் கேட்டு திணறடித்தார். விவாதம் முழுவதும் புன்னகைத்தபடியே காணப்பட்டார்.
முதல் முறையாக அரசியலுக்குள் நுழைந்துள்ள டிரம்ப், பதற்றத்துடன் காணப்பட்டார், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார்.
இதுவரை, தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் விமர்சித்து வந்த இருவரும், முதல் முறையாக, ஒரே மேடையில் வாதத்தில் ஈடுபட்டனர்.
அதிபராகும் முழு உடல்தகுதி ஹிலாரிக்கு இல்லை என, டிரம்ப் கூறினார்.
தனிப்பட்ட முறையில் தொடரப்பட்ட இந்த தாக்குதலுக்கு, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாதவர் டிரம்ப், மத ரீதியில் விமர்சனம் செய்பவர் என, எதிர் தாக்குதலைநடத்தினார் ஹிலாரி.
ஹிலாரிக்கு ஆதரவுஎந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்யாதவர்களை கவர்வதற்காகவே, இந்த பொது நேரடி விவாதம் நடத்தப்படுகிறது.
அதன்படி நடத்தப்பட்ட முதல் பொது விவாதத்துக்குப் பின், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
ஹிலாரிக்கு ஆதரவாக, 62 சதவீதம்; டிரம்புக்கு ஆதரவாக, 27 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
இந்த விவாதத்துக்கு முன், கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், ஹிலாரி சற்று முன்னிலையில் இருந்தார்.
இம்மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், டிரம்ப் முன்னிலை பெற்றிருந்தார்.
அதிபர் தேர்தல் நடக்க, ஆறு வாரங்களே உள்ள நிலையில், பிரசாரம் சூடிபிடிக்க தொடங்கியுள்ளது.
– Dina Malar