ஏ.எச்.எம்.பூமுதீன்
சமுகத்திற்காகவும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காகவுமே கட்சி மாறியதாக ஹூனைஸ் எம்பி தெரிவிக்கும் காரணம் முழுப்பூசனி;க்காயை சோற்றுக்குள் மறைப்பதற்கு ஒப்பானதாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிஸின் செயலாளர் நாயகம் வை.எல் .எஸ் ஹமீட் தெரிவித்துள்ளார்.
அ.இ.ம.கா உயர்பீட கூட்டங்களில் கலந்து கொள்ளாமலும் அங்கு கருத்துக்கள் எதையும் தெரிவிக்காமலும் தான் தோன்றித் தனமாக கட்சி மாறிவிட்டு மேற்படி காரணத்தை ஒப்புவிப்பது அவரது சுயநலத்தை தெளிவாக எடுத்துக்காட்ட போதுமானது என்றும் வை.எல்.எஸ் ஹமீட் தெரிவித்துள்ளார்.
ஹூனைஸ் பாறுக் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாறியமை தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அ.இ.ம.கா செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் , கட்சியின் உயர்பீடத்தை விரைவில் கூட்டி கட்சிமாறிய ஹூனைஸ் எம்பி;க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்படும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அ;றிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு
அ.இ.ம.கா வின் உயர் பீடம் ஒன்றுக்கு பல தடவை கூடி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கட்சி எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளது.
எனினும் இந்த கூட்டங்களில் எதுவித முடிவும் எடுக்கப்படவில்லை. இந்தக் கூட்டங்களுக்கெல்லாம் ஹூனைஸ் பாறுக் எம்பிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் அந்தக் கூட்டங்கள் எவற்றுக்கும் சமுகமளிக்கவில்லை.
ஹூனைஸ் எம்பி , கட்சி மாறியதற்காக அவர் கூறும் காரணங்கள் தான் ஐ.தே.கவுக்கு செல்வதற்கான காரணம் என்றால் அவற்றினை உயர்பீடக் கூட்டங்களில் கலந்து கொண்டு தெரிவித்து கட்சியின் ஏகோபித்த முடிவும் எடுக்கப்பட்ட பின்பு அவர் மாற்றம் பற்றி யோசித்திருக்கலாம்.
அவர் கூறியுள்ள காரணங்கள்தான் உண்மை என்றால் அதனை உயர்பீட கூட்டங்களில் கலந்து கொண்டு தெரிவித்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு தெரிவிக்காமல் மேற்சொன்ன காரணங்களை கூறுவது அவரது தடுமாற்றத்தை காட்டுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இறுதி முடிவினை இதுவரை கட்சி மேற்கொள்ளவில்லை.
அ.இ.ம.காவின் தலைமைத்துவம் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அவர் ஆற்றியுள்ள பணியை வன்னி மக்கள் மட்டுமன்றி நாடு பூராகவுமுள்ள மக்களும் நன்கறிவர்.
முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தில் சாதாரண இலிகிதராக கடமையாற்றிய ஹூனைஸூக்கு எதுவித அரசியல் பின்புலமும் இல்லை.
அ.இ.மகா கட்சியே சாதாரண இலிகிதரான இவரை நாடாளுமன்றம் என்ற உயர் சபைக்கு உயர்த்தி அவருக்கு அந்தஸ்த்தையும் வழங்கியது. அதற்கு நன்றிக் கடனாகவா கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் துரோகம் இழைத்துவிட்டு ஐ.தே.க.கவின் பக்கம் பல்டி அடித்தார். என்ற நியாயமான கேள்வியை அவரிடம் கேட்பது நியாயம் என்றே தோன்றுகின்றது என்றும் கட்சியின் செயலாளர் நாயகம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்