Breaking
Wed. Dec 25th, 2024

– ஊடகப்பிரிவு –

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் முன்தினம் (06.09.2015) ஹெம்மாதகம நகரில் நடைபெற்ற இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பொது பல சேனாவின் உறுப்பினர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாதகம கிளை சார்பில் நேற்றைய தினம் ஹெம்மாதகம க்ரீன் வீச் வரவேற்பு மண்டபத்தில் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் கலந்து கொண்டு மாற்று மத நண்பர்களின் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
குறித்த நிகழ்ச்சியை நடத்த விடாது தடுப்பதற்கு முனைந்த பொது பல சேனாவின் உறுப்பினர்கள் அராஜகமான முறையில் அரங்கினுல் நுழைந்து நிகழ்ச்சியை நடத்த விடாது அராஜகத்தில் ஈடுபட்டதுடன், சகோதரர் அப்துர் ராசிக் அவர்களை கொலை செய்வோம் என்று கொலை மிரட்டலும் விடுத்தார்கள்.
பொது பல சேனாவின் அராஜகம் காரணமாக நிகழ்ச்சி இடை நிறுத்தப்பட்டது.
பொது பல சேனாவினர் அத்துமீறி நுழைந்தமை குறித்து ஹெம்மாதகம போலிஸ் நிலையத்தில புகார் செய்வதற்கு சென்ற போது பிக்குகளுக்கு எதிராக புகார் அளித்தால் ஹெம்மாதகம பகுதியை தீ வைத்து எறிப்போம் என பொது பல சேனாவின் பிக்குகள் கூறுவதால் உங்கள் புகாரை பதிவு செய்ய முடியாது என்றும் சமாதானமாகி விடுங்கள் என்றும் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புகாரை பதிவு செய்ய மறுத்து விட்டார். எனவே பொலிஸின் பக்கச் சார்பான செயல்பாடு குறித்தும், பொது பல சேனாவின் அராஜகத்திற்கு எதிராகவும்   (07.09.2015) கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமை நிர்வாகம் சார்பாக முறைபாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஜமாத்தின் பொதுச் செயலாளர் ராசிக் அவர்கள் “பொது பல சேனாவின் மக்கள் விரோத, மற்றும் ஜனநாயக விரோத செயல்பாடுகள், இனவாத செயல்பாடுகள் மற்றும் அராஜகங்களுக்கு எதிராக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் என்றும், சட்டப்படி இவர்களின் அராஜகங்களுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் போது ஜமாத்தின் துணை செயலாளர்களான சகோ. ரீஸா யூசுப், சகோ. ரஜாப்தீன், சகோ. முயினுத்தீன் மற்றும் சகோ. ரஸ்மின் ஆகியோரும் உடனிருந்தனர்.
இனவாதத்தை முன்னெடுத்து இனங்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை உண்டாக்கி, முஸ்லிம்களின் மத செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் பொது பல சேனாவின் இனவாத நோய்க்கு சட்ட ரீதியாக விரைவில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊடகப் பிரிவு
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்

Related Post