இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஹெலியில் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இயற்கை அனர்த்தங்களை வானிலிருந்து நேற்று புதன்கிழமை பார்வையிட்டார்.
இயற்கை அனர்த்தங்களை பார்வையிட்டதன் பின்னர், நாடாளுமன்றத்துக்கு நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, ஹெலியிலேயே வருகை தந்தார். அவைக்கு வருகை தந்த பிரதமர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை, பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘இயற்கை அனர்த்தங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களை நானும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் ஹெலிகொப்டரில் சென்று ஆகாயத்தில் இருந்து அவதானித்தோம்.
கம்பஹா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நிலங்கள், வெள்ள நீரினால் நிரம்பியுள்ளன. கடுகண்ணாவையை பொறுத்தவரையில், அங்கு ஏற்பட்டிருக்கும் அனர்த்தம் அதிகமாகும்.
அங்கு ஏற்பட்டுள்ள மண்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் இராணுவமும், விசேட அதிரடிப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இத்தருணத்தில் அரசாங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துகொள்வதுடன் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று (நேற்று), படைவீரர்கள் தினமாகும், இவ்வாறானதொரு தினத்தன்று படையினர், உயிர்களைக் காப்பாற்றி கொண்டிருக்கின்றனர்.
உயிர்களைக் காப்பாற்றுவதே உண்மையான படைவீரர்கள் தினமாகும். அரநாயக்கவிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறிய அவர், மண்சரிவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. ஆனால், தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் முன்கூட்டியே ஆராய்ந்து ஒரு முடிவை எடுத்து அதனை நீண்டகால செயற்றிட்டமாக குறைக்கலாம்’ என்றார்.