முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்கள் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பதற்கு தடை என்றால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா ஆடையையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என சிங்கள ராவய தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிங்கள ராவய இதனை குறிப்பிட்டது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவ்வமைப்பு,
நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்கே முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்களுக்கு பொலிஸார் தடை விதிக்கின்றனர் என்றால் நாட்டில் இடம்பெற்ற பாரிய குற்றச் செயல்களுக்கு காரணமாக இருந்த பர்தா ஆடைக்கு பொலிஸார் என்ன செய்யப்போகின்றனர்.
குறிப்பாக கண்டி கட்டுகஸ்தோட்டை வங்கியில் இடம்பெற்ற கொள்ளையின் போது பர்தா உடையில் வந்தவர்களே கொள்ளையிட்டுச் சென்றனர்.
போதைப் பொருள் கடத்தல் செய்வோர், பாரிய குற்றங்களை புரிவோர் என பல கொள்ளைகாரர்கள் இந்த பர்தா ஆடையினுள்ளே ஒழிந்துள்ளனர்.
பர்தா உடையுடன் வீதியில் செல்லும் ஒருவர் ஆணா பெண்ணா என்பதை கண்டறிய பொலிஸார் எவ்வாறான அணுகுமுறைகளை தெரிந்து வைத்துள்ளனர் என்றால் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசத்துடன் செல்வோரையும் மக்கள் அறிந்துகொள்ளும் வழிவகைகள் இருக்கும்.
எனவே முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்களுக்கு தடை விதிக்கப்படுமாயின் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பர்தா ஆடையையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.