Breaking
Sat. Sep 21st, 2024
ஹோமாகம நீதிமன்ற அருகில் பிக்குமார் கலகம் புரிந்து சட்டத்தை அவமதித்ததைக் கண்டித்து சட்டத்துறை அறிஞர்கள், புத்திஜீவிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
பொதுவில் இந்தச் செயற்பாடு பௌத்த பிக்குமார்கள் அனைவருக்கும் அபகீர்த்தி விளைவிக்கும் ஒரு விடயமாகி விட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு முன்னாள் பிரதம மஜிஸ்ரேட்டும், நீதிச்சேவை அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் பிரதம செயலாளருமான ஜீ.டீ. குலதிலக்க கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டின் சட்டத்தை நீதிமன்றம் அமுலாக்கும் போது அதற்கு தடை ஏற்படுத்தி ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கும் தரப்பினருக்கும் ஏசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
இந்தக் கட்டத்தில் மதத்தைப் பெரிதுபடுத்திக் கருத முடியாது. சட்டத்தின் ஆதிபத்தியம் இருக்க வேண்டும். சட்டத்தை முறையாக அமுலாக்காமல் போனால் “காட்டு தர்பார்” உருவாகி விடும்.
ஹோமாகம நீதிமன்ற முன்னால் பௌத்த பிக்குமார் இவ்வாறு நடந்து கொண்டமையைச் சகித்துக் கொண்டால் உயர் நீதிமன்றங்களிலும் இந்த நிலைமை உருவாகலாம். இதனால் தேவைக்கேற்றவாறு சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
தவறு செய்தால் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். ஸ்கென்டினேவியா நாடுகளின் பிரதம சங்க நாயகர் கிரிந்திகல்லே சிரி தம்மரத்தின தேரர் கருத்துத் தெரிவிக்கையில்,
பிக்குமாரின் ஒழுக்கம், நடவடிக்கை மூலமாக மக்களுக்கு முன்மாதிரி வழங்கப்பட வேண்டும். இத்தகைய செயற்பாடுகளால் வளரும் சமுதாயம் துர்ப்பாக்கியமான நிகழ்வுகள் ஊடாக கெட்ட முன்மாதிரியைப் பெறுகிறது. புரட்சிகரமாக அன்றி புத்திசாதுரியத்துடன் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார கருத்துத் தெரிவிக்கையில்,
புத்த பிக்குமார் மட்டுமன்றி நாட்டின் சகலரும் சட்டத்துக்கு உட்பட்டாக வேண்டும். இவ்வாறு பிக்குமார் நடந்து கொள்வது அவர்களுக்கு உகந்தது அல்ல. இதனை சோகமிக்க முறையில் மக்கள் நிராகரிக்கின்றனர்.
இத்தகைய செயற்பாடுகளால் ஏனைய பிக்குமார் தொடர்பாகவும் மக்கள் அவநம்பிக்கை கொள்வர் என்று கூறியுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஹங்குரன்கெத்த தீரானந்த தேரர் கருத்து வெளியிடுகையில்,
நாட்டின் பௌத்த மக்கள் எப்போதும் பௌத்த பிக்குமாரை முன்மாதிரியாகக் கொள்கின்றனர். அவர்கள் முன்மாதிரி காட்ட வேண்டியவர்கள். அவர்கள் இவ்வாறு முறைகேடாக நடப்பது அனுமதிக்க முடியாதது. நாட்டின் சட்டத்தை சகலரும் கௌரவிக்க வேண்டும் என்றார்.
பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அநுருத்த பிரதீப் கர்ணசூரிய கருத்து வெளியிடுகையில்,
நீதிமன்றத்தை எவரும் கேலி செய்ய இயலாது. நீதிமன்றில் ஏதாவது கூற இருந்தால் அதற்கு முறை ஒன்று உள்ளது. அதற்கேற்றவாறே செயற்பட வேண்டும்.
இன்று கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எந்த அதிகாரமும் இல்லை. பௌத்தர்கள் என்ற வகையில் எமக்கு இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கூறி உள்ளார்.

By

Related Post