ஹைபிரிட் நீதிமன்றம் எனும் பொறி முறையொன்று வரப்போகிறதா? அப்படியொன்று இருக்கின்றதா? என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ் மன் கிரியெல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எம்.பி.யிடம் கேள்வியெழுப்பிய போது அவ்வாறு எதுவும் கிடையாது என்று அவர் கையால் சைகை செய்து காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் போது எழுந்த குழப்பகரமான நிலையின் போது “ஹைபிரிட் நீதிமன்ற விசாரணை” தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது சபைக்குள் குழப்பமும் கூச்சலும் நிறைந்து காணப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ சபையில் பிரசன்னமாகியிருந்தார்.
விமல் வீரவன்ச எம்.பி கூறுவது போன்று ஹைபிரிட் நீதிமன்றம் ஒன்று கிடையாது. அவ்வாறு யோசனையோ தீர்மானமோ இல்லை என்றும் சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறினார். எனினும் தேசிய சுதந்திர முன்னணி உட்பட சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் பலரும் இணைந்து கொண்டு அரசாங்கம் பொய் கூறுவதாகவும் ஹைபிரிட் நீதிமன்ற முறைமை ஒன்றுக்கு அரசாங்கம் இணங்கியிருப்பதாகவும் கூறினார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல, ஹைபிரிட் நீதிமன்றம் என்ற பொறிமுறை ஒன்று இல்லை. இதனை முன்னாள் ஜனாதிபதியும் அறிவார் என்று கூறியதுடன் அவ்வாறானதோர் நீதிமன்ற பொறிமுறை இருக்கிறதா என்று கேள்வியெழுப்பினார்.
இதன்போது சபையின் குழப்ப நிலையை சிரித்தவாறே பார்த்துக்கொண்டிருந்த மஹிந்த ராமஜபக் ஷ கைகளால் சைகை செய்து அப்படி எதுவும் கிடையாது என கூறினார். எனினும் குழப்ப நிலை தொடர்ந்திருந்தது.